/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சித் தலைவர் மன்னராக முடியாது; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
/
ஊராட்சித் தலைவர் மன்னராக முடியாது; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
ஊராட்சித் தலைவர் மன்னராக முடியாது; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
ஊராட்சித் தலைவர் மன்னராக முடியாது; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
ADDED : நவ 03, 2024 06:31 AM
மதுரை: தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதிக்குரிய மனுவை தள்ளுபடி செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,'ஒரு ஊராட்சித் தலைவர் மன்னராக முடியாது' என அதிருப்தியை பதிவு செய்தது.
ரோசல்பட்டியில் ஒரு கோயில் உள்ளது. அதன் நிலத்தில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள கலெக்டர், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், ரோசல்பட்டி ஊராட்சி தலைவருக்கு தடை விதிக்கக்கோரி கோயில் நிர்வாகி பழனிசாமி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
2022 ல் தனி நீதிபதி: அந்நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்கிறார் மனுதாரர். அது அரசு புறம்போக்கு நிலம் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. அது தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி நிலத்தில் கோயில் நிறுவப்பட்டது. இயற்கையாகவே இது ஒரு வழிபாட்டுத் தலமாகவும், அருகிலுள்ள மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. கூடுதல் நிலம் உள்ளது. இங்கு குழந்தைகளின் நலனிற்காக அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி குழந்தைகளின் மீது மனுதாரர் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். நிலத்தை விட்டுக் கொடுப்பதால் மனுதாரருக்கு நஷ்டமோ, யாருக்கும் லாபமோ இல்லை என்பதை மனுதாரர் புரிந்துகொள்வார். குழந்தைகளுக்கு உதவும் வகையில் அங்கன்வாடி அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட கோயில் நிர்வாகம் செய்து தரவில்லை.
நிலம் அரசு புறம்போக்கு நிலம். கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. கோயில் எஞ்சியுள்ளது. அது தொடர்ந்து இருக்கும். அங்கன்வாடி கட்டுமானம் தொடர்பான ஆட்சேபனைகள் தவறானவை. இம்மனு ஏற்புடையதல்ல.
ஏற்கனவே கட்டப்பட்ட கட்டுமானத்தைத் தவிர வேறு எந்த கட்டுமானத்தையும் அரசு தரப்பில் மேற்கொள்ளக்கூடாது. கோயில், அதன் புனிதத் தன்மையை பாதுகாக்க அரசு தரப்பில் அனுமதிப்பார்கள் என நம்புகிறேன். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.ரோசல்பட்டி ஊராட்சி தலைவர்,' தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு தாக்கல் செய்வதில் 816 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என மனு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பிரமாண பத்திரத்தின் ஒரு பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை கண்டிக்கத்தக்கது. ஒரு ஊராட்சி தலைவர் அரசின் மன்னராக முடியாது.
உத்தரவில் தேவையற்ற கருத்து உள்ளதாகவும், அதனால் தனக்கு வருத்தம் இல்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் காப்பகத்திற்கு ரூ.10 ஆயிரத்தை மனுதாரர் செலுத்த வேண்டும்.
இதை நிறைவேற்றியது குறித்து நவ.11 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.