/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் வரி வசூலிப்பதில் ஊராட்சி செயலாளர்கள் தவியாய்... தவிப்பு: அதிகாரிகளோ நெருக்கடி; பொதுமக்களோ கெடுபிடி
/
குடிநீர் வரி வசூலிப்பதில் ஊராட்சி செயலாளர்கள் தவியாய்... தவிப்பு: அதிகாரிகளோ நெருக்கடி; பொதுமக்களோ கெடுபிடி
குடிநீர் வரி வசூலிப்பதில் ஊராட்சி செயலாளர்கள் தவியாய்... தவிப்பு: அதிகாரிகளோ நெருக்கடி; பொதுமக்களோ கெடுபிடி
குடிநீர் வரி வசூலிப்பதில் ஊராட்சி செயலாளர்கள் தவியாய்... தவிப்பு: அதிகாரிகளோ நெருக்கடி; பொதுமக்களோ கெடுபிடி
ADDED : செப் 30, 2025 04:17 AM

ஊராட்சிகளில் வீட்டுவரி, குடிநீர் வரியை வசூலிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. இதை விரைந்து வசூலிக்க ஊராட்சி செயலாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிதியாண்டுக்குள் வசூலிக்க வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது ஊராட்சி செயலாளர்களுடன் 'கூகுள் மீட்' நடத்தி வரி வசூலில் இலக்கை அடைய அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஊராட்சி செயலாளர்கள் வரிவசூலில் ஈடுபடும்போது கிராம மக்கள் ஒத்துழைப்பின்மையால் தவிக்கின்றனர். ஒரு கிராமத்தில் ஏற்கனவே ஊராட்சி மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பர். அதே நீர்வளத்தை அடிப்படையாகக் கொண்டு மீதியுள்ள வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு முழுமையாக குடிநீர் கிடைப்பதில்லை.
இவர்கள் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் இலவசம்தானே, குடிநீர் வரியை ஏன் செலுத்த வேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர். சில கிராமங்களில் புதிய இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்காத நிலையில் அதற்கு வரிசெலுத்த வேண்டுமா என்றும் கேட்கின்றனர். அதிகாரிகளோ ஊராட்சி செயலர்களிடம் 'இணைப்பு கொடுத்தாகி விட்டதே. வரி வசூல் என்னாச்சு' என்று கேட்கின்றனர்.
மத்திய அரசின் திட்டம் என்பதால் பா.ஜ., நிர்வாகிகள் சிலர் வரிவசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதாலும், நிதியாண்டு முடிவடைய இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ளதாலும் அவகாசம் தரும்படியும் பலர் ஊராட்சி செயலர்களிடம் கூறுகின்றனர். அதேசமயம் அதிகாரிகள் நெருக்கடியால் வரிவசூல் செய்வதில் இலக்கை எட்ட இயலாமல் ஊராட்சி செயலர்கள் தவிப்பில் உள்ளனர்.
தினமும் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் ஊராட்சிகளுக்கு தண்ணீர் வழங்க குடிநீர் வாரியத்திடம் ஆயிரம் லிட்டரை ரூ.9க்கு வாங்குகிறோம். ஒருவருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கு குழாய், கரண்ட், மோட்டார் இயக்குபவர் சம்பளம் என செலவு உள்ளது. இதனால் குடிநீர் வழங்கினால் அதற்கு தினமும் ரூ.1 வீதம் மாதம் ரூ.30 வரி வசூலிக்கிறோம். இத்தொகையை பொதுமக்கள் வழங்க தயாராகவே உள்ளனர். உதாரணமாக 120 ஊராட்சிகளில் நுாறு சதவீத வரி வழங்கியுள்ளனர். ஜல்ஜீவன் திட்டத்திலும் குழாய் இணைப்பு இலவசமே தவிர, குடிநீருக்கு வரி உண்டு. ஜல்ஜீவன் முதற்கட்ட குழாய் இணைப்பு கொடுத்தபோது தரமற்ற குழாய்களால் பாதிப்பு ஏற்பட்டு சில பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாமல் உள்ளது. மாவட்ட அளவில் மொத்த வீடுகள் 6.2 லட்சத்தில் 4.5 வீடுகளில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் வினியோகம் இல்லாத 1.5 லட்சம் இணைப்புகளிடம் வரிவசூல் செய்யவில்லை. அதனை பயன்படுத்துவோரிடம் மட்டுமே வசூலிக்கிறோம். தண்ணீருக்காக குடிநீர் வாரியத்திற்கு ரூ.9 கோடி பாக்கி உள்ளது. இதையெல்லாம் நிர்வகிக்க வரிவசூல் அவசியம். -அரவிந்த் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர்