/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பி.டி.ஓ., மீது ஊராட்சி செயலர்கள் புகார்
/
பி.டி.ஓ., மீது ஊராட்சி செயலர்கள் புகார்
ADDED : ஆக 06, 2025 01:09 AM
மதுரை; கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலரால் மனஉளைச்சலுடன் பணியாற்றுவதாக 20 ஊராட்சி செயலர்கள் கூடுதல் திட்ட இயக்குனர் வானதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலர் செல்லப்பாண்டி மீது குற்றம்சாட்டி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதியிடம் மனு கொடுத்தனர்.
இதில், ஊராட்சிகளால் வழங்கப்படும் செலவின பட்டியல்களை அனுமதிக்க காலதாமதம் செய்வதால் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. பணிகளுக்காக பல நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை. செலவின பட்டியலுக்கு ஏற்ப தொகை வழங்காதவர்களை இடமாறுதல் செய்வேன் என மிரட்டுவதால் அனைவரும் மனஉளைச்சலில் பணியாற்ற முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அட்டப்பட்டி ஊராட்சி செயலர் பாண்டிசெல்வம் கூறுகையில், ''பி.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களை மிரட்டுகிறார். இதனால் 20க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் புகார் தெரிவித்தோம். அவர் பில்களை செட்டில் செய்ய தாமதம் செய்வதால், வளர்ச்சி பணிகளுக்கான செலவினங்களை செய்ய இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.