ADDED : ஜன 31, 2012 09:44 AM

அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது என்பது சான்றோர் சொல். ஆனால் அரிய பிறப்பு பெற்றும் கூட சிலர் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்ளாமல் கோழைகளாக வாழ்க்கைப் பயணத்தை பாதியிலேயே தற்கொலை செய்து முடித்துக் கொள்கின்றனர்.
தற்கொலைகளை தடுக்கும் சேவையையும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் உன்னத பணியையும் மதுரையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வரும் புதுயுகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரையின் புகழ் பெற்ற மனநல மருத்துவர் சி.ஆர்.எஸ் ( சி.ராமசுப்ரமணியம்) தலைமை வகித்தார். தற்கொலை என்பது ஒரு தனிநபர் வாழ்வை பறிப்பதோடு மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்து இருக்கும் குடும்பத்தின் நிலையையும் சீர்குலைத்து விடுகிறது. தற்கொலைகள் பொருளாதார நெருக்கடி, உடல்நலக்குறைபாடு, மனச்சிதைவு போன்ற பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் தற்கொலையை தடுக்க வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். தற்கொலைகளை தடுப்பதில் மதுரை மாவட்டம் ஒரு முன்னோடியாக திகழும் அளவிற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புதுயுகம் அமைப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

