ADDED : ஏப் 12, 2025 04:44 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது.
காலையில் அத்திமர மூலவர் விக்ரகத்திற்கும், உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மதுரை பகுதிகளிலிருந்து பக்தர்கள் காவடிகள் , பால்குடங்கள் எடுத்து வந்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவர்கள் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை முடிந்து, முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது.
வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்களின் வசதிக்காக நிர்வாகம் சார்பில் கோயில் முன்பு பெரியரத வீதி, சன்னதி தெருவில் தேங்காய் நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலுார்: மேலுார் மில்கேட் முருகன் கோயிலில் ஏப். 1 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று மேலுார் சாலகிரையான் ஊருணியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம், முருகனுக்கு வள்ளி- தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. பின்பு புஷ்பரதத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சக்தி மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, சேனல் ரோடு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். இன்று ஏப். 12 பொங்கல் வைக்கப்படும். தொடர்ந்து பூத்தட்டு, முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப். 13ல் முளைப்பாரி, சக்தி கரகம் கரைத்து கொடி இறக்கப்படும். ஏப். 18 பொங்கல் வைத்து திருவிழா நிறைவு பெறும்.
கொட்டாம்பட்டி : கல்லங்காடு அழகு நாச்சியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். திரளான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.