/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
ADDED : பிப் 21, 2025 05:53 AM

- நமது நிருபர் குழு - மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கை படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். மூன்றாவது ஒரு மொழி கற்பது மாணவர்களுக்கு எப்படி பயனுள்ளதாக அமையும்? மதுரையை சேர்ந்த பெற்றோர் சொல்வது என்ன...
அரசு பள்ளிகளில்வேண்டும் சர்வே
- பாலுமீனாள், ஆசிரியை, தனியார் பள்ளி
கல்வியில் அரசியல் புகுந்துவிடக் கூடாது. காலத்திற்கேற்ற வளர்ச்சி உள்ளடங்கி கல்வியில் இதுவரை இரண்டு கல்விக் கொள்கைகளை நாம் கடந்து விட்டோம். ஆனால் பா.ஜ., கொண்டுவந்தது என்பதற்காக ஒரு மாநில அரசு அதை பின்பற்ற அடம் பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது ஒரு காலம். ஆனால் அப்போதும் ஹிந்திக்கு ஆதரவான குரல் ஒலிக்கத்தான் செய்தது. ஆனால் வெளியே தெரியவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் ஹிந்தி டியூஷன் செல்கின்றனர். 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போல் பல இடங்களில் 'ஸ்போக்கன் ஹிந்தி' மையங்கள் செயல்படுகின்றன. ஹிந்தி வேண்டாம் என்றால் ஏன் இத்தனை மையங்கள் செயல்பட வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் ஒரு சர்வே எடுத்தால் பலர் ஹிந்தி உள்ளிட்ட மூன்றாவது மொழி வேண்டும் என்று தான் கூறுவர். மாநில அரசு முன்வந்து சர்வே எடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்புக்குகூடுதல் தகுதியாகும்
-கவிதா, குடும்ப தலைவி
ஒரு மொழியை படிக்கும் வாய்ப்புக்கு ஏன் தடை விதிக்க வேண்டும். 'களவை கூட கற்று மற' எனக் கூறுகின்றனர். தமிழ், ஆங்கிலத்தை தவிர கூடுதலாக ஒருமொழியை ஏன் கற்க கூடாது. கூடுதல் மொழி தெரிந்தால் வேலைவாய்ப்புக்கு கூடுதல் தகுதியாக கூட அமைந்து விடலாம். மொழியை தாண்டிய மனிதர்களிடம் பழகுவதற்கும், அதுதொடர்பான பண்பாடு கலாசாரத்தை அறிந்துகொள்ளவும் இதன் மூலம் முடியும். தற்போது 100க்கு 90 சதவீதம் இளைஞர்களுக்கு வெளி மாநிலங்களில் தான் வேலை கிடைக்கிறது. அதுபோன்ற நிலையில் ஹிந்தி அல்லது ஏதாவது கூடுதலாக ஒரு மொழியை கற்றுத் தேர்ந்திருந்தால் கை கொடுக்கும் அல்லவா. மாணவப் பருவம் மிக முக்கியமானது. அந்த பருவத்தில் தான் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும்.
ஊன்றுகோலாக உதவும்
-அ.ஜான் பெலிக்ஸ் கென்னடி
ஓய்வு பெற்ற ஆசிரியர்
நாம் காணும் வண்ணங்களில் விரும்பும் வண்ணம் போல, உண்ணும் பல்சுவை உணவில் விரும்பும் உணவு போல மொழியிலும் கூடுதலாக விரும்பும் மொழிகளை கற்றால் நமக்குத்தானே லாபம். மும்மொழி கொள்கை அதைத்தானே அறிவுறுத்துகிறது. இதற்கு அடிப்படையான தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏற்பது நமது சந்ததியருக்கு செய்யும் நன்மைதானே. இந்த உரத்த சிந்தனை நம்மில் அனைவருக்கும் எழவேண்டும். இளவயது மாணவர்கள் கற்கும் மொழி தொன்மையான தாய்மொழியாம் தமிழாயினும், எதிர்கால பணி பயன்பாடு, பயண பயன்பாடுகளுக்கு கூடுதலாக உதவும் மொழி இன்றியமையாததே. நாம் பணியிடை பயிற்சியாக வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது மூன்றாம் மொழியாக ஹிந்தியோ, பிரெஞ்சு, மலையாளம் என எந்த மொழியானாலும் ஊன்று கோலாக உதவும் அல்லவா. அதனால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்பதும், கூடுதல் மொழிகளை கற்பதும் நன்மையே பயக்கும்.
கல்வியில்சமநிலை அவசியம்
- ரம்யா, குடும்பத் தலைவி
ஒரு புதிய மொழி கற்பதன் மூலம் மற்ற மாநில கலாசாரம், பண்பாட்டை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அந்த வாய்ப்பு இருக்கும் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் கிடைக்க கூடாது. அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழி கொள்கை கொண்டுவந்தால் தான் கல்வியில் சமநிலை ஏற்படும். மாணவர்களின் தொடர்பு திறன், அறிவாற்றல் திறன், கலாசார விழிப்புணர்வு ஏற்படும். மூன்றாவது மொழியால் மாணவர்களுக்கு கல்வி அழுத்தம் ஏற்படும் என்ற அச்சம் பெற்றோருக்கு உள்ளது. ஒருபோதும் மாணவர்களுக்கு கல்வி அழுத்தம் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மொழியறிவு அவசியம்
- மாலதி, குடும்பத் தலைவி
பள்ளியில் மூன்றாவது மொழியின் அடிப்படை மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுவதால் குழந்தைகளுக்கு எவ்வித பாரமும் இல்லை. என் மகள் ஆர்வத்துடன் பள்ளியில் ஹிந்தி பயில்கிறாள். தனியாக முதல்நிலை தேர்வும் முடித்துள்ளாள். இதனால் அவளுடன் விளையாடும் ஹிந்தி பேசும் நண்பர்களுடன் சரளமாக உரையாட முடிகிறது. ஆங்கிலம் மட்டும் தெரிந்து மற்ற மாநில மக்களுடன் பழக, பணிபுரிவதில் சிரமம் உள்ளது. எனவே மூன்றாவது மொழி கற்பது அவசியம். இதுதான் யதார்த்தம். குழந்தைகளே கூடுதல் மொழிகளை ஆர்வமுடன் பயிலும்போது அதற்கு துணை நிற்பதில் தவறில்லை. மாநில பாட திட்ட மாணவர்களுக்கும் மூன்றாவது மொழி படிக்க ஆர்வம் இருக்கலாம். புதிய கல்விக் கொள்கை மூலம் அவர்கள் விரும்பிய மொழியை படிக்க வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பிற பகுதிகளிலோ வெளிநாடுகளிலோ சிரமமின்றி பணிபுரிய மொழியறிவு அவசியம்.
வாய்ப்பளிக்க வேண்டும்
- கார்த்திகா, குடும்பத் தலைவி
நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல ஹிந்தி அவசியம். நான் பிரச்சார சபா மூலம் ஹிந்தி படித்தேன். என் மகளுக்கு பள்ளியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சுமையாக நினைக்காமல் ஆர்வமுடன் பயில்கிறாள். சிறு வயதில் தான் குழந்தைகளால் அதிக மொழிகளை ஆர்வமுடன் கற்க முடியும். புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. விரும்பிய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து கற்கலாம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் பிற மொழி படிக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக...
- செல்வம், ஐ.டி ஊழியர்
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை காலவாதியாகி விட்டது. ஆங்கிலம் கற்பது போல ஹிந்தி போன்ற மற்ற மொழிகள் கற்பது இன்றைய நடைமுறையின் கட்டாயம். மாணவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. மற்ற மாநிலங்கள் பின் பற்றும் போது இங்கும் செயல்படுத்துவதால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கற்றலின் மூலம் அறிவு விரிவடையும், மற்ற நாடுகள், மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளும் தெரிந்து கொள்ள முடியும். பள்ளிகளில் கற்பதால் இதற்காக தனிப்பட்ட நேரம் ஒதுக்கவும் தேவையில்லை. உலகத்திற்கு எங்கும் செல்லலாம். எந்த பயமோ தயக்கமோ இருக்காது. இந்த கல்விக் கொள்கையை என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வரவேற்கிறேன்.
கல்வி தரமானதாக இருக்கணும்
-எஸ்.பிரியதர்ஷினி
ஐ.டி.நிறுவன இயக்குனர்
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கக் கூடிய கல்வி, நாம் வரிசெலுத்தி கிடைக்க வேண்டிய அரசு பள்ளியில் ஏன் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் வசதியை கொண்டு வரும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏன் மாநில அரசே கெடுக்கிறது என்ற ஆதங்கம் பலருக்கும் உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதுவும் சமமாக, தரமானதாக கிடைக்க வேண்டும். இதைத்தான் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துகிறது. இதை ஏன் கூடாது என்கின்றனர். அடுத்து தனியார் பள்ளி மாணவன் மூன்றாவது மொழியாக மற்றொரு மொழியை படிக்க வாய்ப்பு உள்ளது. அதை அரசு பள்ளியில் வைக்க வேண்டும் என்றால் ஹிந்தியை திணிக்கிறீங்க என்கின்றனர். அரசு பள்ளியிலும் வசதி வாய்ப்புகள் வந்தால் தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய நிலைமை வருமோ என்று பயந்தே எதிர்ப்பதாக தெரிகிறது. இதனால் அரசு பள்ளியில் படித்த நான் உட்பட பலரும் தனியார் பள்ளியில் படித்து அறிவுத்திறமை, மொழிப்புலமை உள்ளோர் முன் கூனி குறுகி நிற்பதாகவே உணர்கிறேன். புதிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு லெவலிலும் கற்றல், செயல்பாடு, விரும்பும் பாடம் படிப்பது என உள்ளது. இத்தனை வசதியுள்ள கொள்கையை அரசு பள்ளியில் அமல்படுத்த மறுப்பதை ஏற்க முடியவில்லை.
பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்
- சரண்யா, குடும்பத்தலைவி
மகன் நித்திஷ் சி.பி.எஸ்.இ., பத்தாவது வகுப்பு படிக்கிறான். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்று மொழியும் படித்தான். ஹிந்தி நன்றாக எழுதப்படிக்க தெரியும். பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலத்தை பாடமாக எடுத்துள்ளான். ஹிந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியும் கூடுதலாக கற்றுக் கொள்வது நல்லது தான். அதற்கேற்ப பாடத்திட்டங்களை வடிவமைத்தால் மாணவர்களுக்கு சுமையாக தெரியாது.
தென்னிந்தியா செல்வதற்கே ஹிந்தி உதவும்
- ரதி, நுாலகர்
மூத்த மகன் சந்தோஷ், சி.பி.எஸ்.இ.,ல் படித்து விட்டு பொறியியல் கல்லுாரியில் படிக்கிறார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி நன்றாக படித்தான். இளைய மகன் சர்வேஸ் பிளஸ் 2 படிக்கிறார். ஹிந்தி மொழி எடுத்துள்ளார். மூன்றாவதாக ஒரு மொழியை கற்கும் போது உயர்கல்விக்காகவும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கும் உதவுகிறது. எத்தனை மொழிகள் கற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு பலம் நமக்கு. கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் போது கூட ஆங்கிலம், ஹிந்தி மொழி அவசியம்.