ADDED : ஆக 15, 2025 02:48 AM
மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த துயரங்களின் நினைவு பற்றிய புகைப்படக் கண்காட்சியை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ் நேற்று துவக்கி வைத்தார்.
பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானில் இருந்து 6 மில்லியன் முஸ்லிம் அல்லாதோர், பஞ்சாப், டில்லி உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் இருந்து 6.5 மில்லியன் முஸ்லிம்கள் இடம் மாறினர். அப்போது நடந்த வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இடம் பெயர்ந்த மக்களின் துயரங்களையும், வலியையும் நினைவுகூரும் வகையில் ஆக., 14ஐ 'பிரிவினை துயரங்கள் நினைவு நாள்' ஆக அனுசரிக்கும்படி 2021 சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில் அந்நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் ஸ்டேஷனின் மேற்கு நுழைவு வாயிலில் கண்காட்சி துவங்கப்பட்டது. இன்று (ஆக., 15) மாலை 6:30 மணி வரை பார்வையிட லாம். அனுமதி இலவசம். கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் உட்பட அதிகாரிகள், மாணவர்கள், பயணிகள் பலர் பங்கேற்றனர்.