ADDED : ஜன 20, 2025 05:39 AM

கொட்டாம்பட்டி: வலைசேரி பட்டியில் ரோட்டோர பாலத்தின் இரு பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
கொட்டாம்பட்டி - தொந்திலிங்கபுரம், சிறுகுடி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு வலைசேரிபட்டி வழியாக செல்ல வேண்டும். இந்த ரோட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதில் வலைசேரி பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சீதா மலையில் இருந்து முழம்பு கண்மாய், பெருமாள் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப் பாலத்தின் இரு பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளமாக உள்ளது. அதனால் இந்த ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். பாலம் அருகே தெருவிளக்கு எதுவுமில்லை. வாகனங்கள் பள்ளத்தினுள் கவிழ்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் ஒன்றிய அதிகாரிகள் பாலத்தின் அரிப்பை சரி செய்து, தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.