/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாத்திரை வாங்குவதற்கும் மணிக்கணக்கில் காத்திருப்பதா வேதனை தாங்காமல் விசும்பும் நோயாளிகள்
/
மாத்திரை வாங்குவதற்கும் மணிக்கணக்கில் காத்திருப்பதா வேதனை தாங்காமல் விசும்பும் நோயாளிகள்
மாத்திரை வாங்குவதற்கும் மணிக்கணக்கில் காத்திருப்பதா வேதனை தாங்காமல் விசும்பும் நோயாளிகள்
மாத்திரை வாங்குவதற்கும் மணிக்கணக்கில் காத்திருப்பதா வேதனை தாங்காமல் விசும்பும் நோயாளிகள்
ADDED : நவ 08, 2024 07:26 AM

மதுரை: சிகிச்சை பெறுவதற்கு தான் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம் என்றால் மாத்திரை வாங்குவதற்கும் மணிக்கணக்கில் காத்திருப்பதாக மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகள் புலம்பினர்.
இம்மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, சர்க்கரை நோய், மனநோய் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகள் அந்தந்த வார்டில் புறநோயாளியாக (ஓ.பி.) சிகிச்சை பெற்று அங்கேயே மாத்திரை வாங்குகின்றனர். மற்ற வார்டுகளின் நோயாளிகள் மருத்துவமனையை முழுவதுமாக சுற்றி வந்து மாத்திரை கொடுக்கும் இடத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும்.
இதய வார்டு நோயாளிகளுக்கு புதிய கட்டடத்தில் ஓ.பி., பிரிவு செயல்படுகிறது. இதற்கு வெளிப்பகுதியில் தனி வாசல் இருந்தாலும் பொது வாசல் வழியாக தான் சுற்றி சென்றனர். இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் தற்போது தனி வாசல் திறக்கப்பட்டு நோயாளிகள் ஓ.பி., வார்டு செல்கின்றனர். ஆனால் மாத்திரை வாங்க மறுபடி மாத்திரை கொடுக்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இங்கு இருக்கை வசதி இல்லாததால் இதய பலவீனம் உள்ளவர்கள் சுவரில் சாய்ந்த நிலையிலோ அல்லது உறவினரின் தோளைப் பற்றிய படியோ பரிதாபமாக நிற்கின்றனர்.
இதேபோல் புற்றுநோயாளிகளுக்கும் நுரையீரல் பிரிவு நோயாளிகளுக்கும் இங்கு தான் மாத்திரை வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு பின் மனதளவிலும் உடலளவிலும் தளர்ந்திருக்கும் இவர்கள் மாத்திரை வாங்குவதற்கும் வரிசையில் நிற்க வேண்டும்.
தனித்தனி கவர்களில் மாத்திரைகளை பிரித்து எழுதி அதை நோட்டில் பதிவுசெய்தபின் பார்மசிஸ்ட் கொடுக்க வேண்டியிருப்பதால் கூடுதல் நேரம் செலவிட வேண்டும்.
மற்றவர்கள் பாதிக்கப்படுவர்
நுரையீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் முக கவசம் அணியாமல் இளைத்துக் கொண்டும் மூச்சு வாங்கிக் கொண்டும் வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் இருமும் போது முன், பின் உள்ளவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.
பல்வேறு வார்டுகளில் இருந்து டீன் அலுவலகம் செல்வதற்கு மாத்திரை கொடுக்கும் இடத்தை கடந்து செல்ல வேண்டும்.
காலையில் நிரம்பி வழியும் கூட்டத்தால் நடப்பதற்கோ வீல்சேர், ஸ்ட்ரெச்சரில் நோயாளிகள் செல்வதற்கோ சிரமமாக உள்ளது. அந்தந்த வார்டுகளிலேயே மருந்தகத்தை வைத்து மாத்திரை வழங்க வேண்டும். பார்மசிஸ்ட் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

