/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆபத்தை உணராது ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
/
ஆபத்தை உணராது ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
ADDED : பிப் 17, 2024 05:25 AM

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில், ரயில் வருவதற்காக கேட் அடைத்த பின்னும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து செல்வதால் விபரீதம் நிகழ வாய்ப்பு உள்ளது.
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கும் தினசரி 80க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில்வே கிராசிங்கை கடந்து செல்கின்றன. தற்போது பல பயணிகள் ரயில் 110 கி.மீ., வேகத்திற்கும் அதிகமாகவே செல்கின்றன. சில நேரம் இரண்டு அல்லது மூன்று ரயில்கள் கடந்து சென்ற பின்னரே மூடிய ரயில்வே கேட் திறக்கப்படும்.
சில நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் எதிர் திசையில் செல்வதும் உண்டு. இந்நிலையில் ரயில் எந்த திசையில் இருந்து, எவ்வளவு வேகத்தில் வருகிறது என்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது.
ரயிலின் திசை, வேகத்தை அறியாத பொதுமக்கள் ஆபத்தை உணராமல், அடைத்த பின்பும் கேட்டை சாவகாசமாக கடந்து செல்கின்றனர். இதனால் ரயில் மோதி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கேட் மூடப்பட்டபின், யாரும் கடந்து செல்லாத வகையில், ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.