/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விரிவாக்க பகுதிக்கு சரியான ரோடே இல்லை
/
விரிவாக்க பகுதிக்கு சரியான ரோடே இல்லை
ADDED : ஜூலை 28, 2025 03:31 AM

மதுரை : மாநகராட்சி 99வது வார்டில் பாலாஜி நகர் வடக்கு விரிவாக்கப்பகுதி உள்ளது. இங்குள்ள 5 தெருக்களில் 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பஸ் போக்குவரத்துக்கு 3 கி.மீ.,யில் உள்ள ஹார்விபட்டிக்கு செல்ல வேண்டும். முதியோர், பெண்களால் அங்கு செல்ல முடியவில்லை. இங்கு மண் ரோடாகவே உள்ளதால் பஸ்வசதி இல்லை.
அசுத்தமான கால்வாய் இப்பகுதி மேம்பாட்டுக்காக போராடும் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராஜாராம், செயலாளர் பாலகோவிந்தன், பொருளாளர் கண்ணன், உறுப்பினர்கள் அப்பன்ராஜ், முருகேசன், வசந்தமேரி, ராஜாமுகமது, ரவிச்சந்திரன், லதா கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சிதம்பரனார், தென்றல், காமராஜர் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மழை நேரங்களில் நடக்க இயலாத அளவு சேறும், சகதியுமாகி விடும்.
ஆக்கிரமிப்புகளால் நிறைந்த 20 அடி ரோடு இருசக்கர வாகனங்களைக் கூட எளிதாக செல்லவிடாது. பூங்கா விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இன்றி தரிசு நிலம் போல் உள்ளது. காலி மதுபாட்டில்கள், சிகரெட் அட்டைகள் சிதறிக் கிடக்கின்றன. துாய்மை பணியாளர்கள் பெயரளவில் பணியாற்றுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் நிலையூர் கால்வாயில் கழிவை கொட்டுகின்றனர். ஹார்விபட்டி - விளாச்சேரி கால்வாய் பகுதிகளில் இரவில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தால் பெண்கள் தெருக்களில் நடமாட அஞ்சுகின்றனர்.
பாதாள சாக்கடை பணிகள் நடராஜர் பிரதான தெருவில் முழுமையடையாமல் உள்ளது. விரிவாக்க பகுதிக்கும் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மின்வசதி இல்லை பல தெருக்களில் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகின்றன. பிரத்யேக டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மின் ஒயர்கள் தாழ்வான உயரத்தில் வாகனங்களால் அவ்வப்போது அறுந்து தொங்குகிறது.
தெருக்களில் திரியும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி கடிக்க வருகின்றன. அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் ரோந்து பணிக்கு வராததால் இப்பகுதியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.