/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதிகள் இன்றி நாயக்கன்பட்டி மக்கள் அவதி
/
அடிப்படை வசதிகள் இன்றி நாயக்கன்பட்டி மக்கள் அவதி
ADDED : ஜன 21, 2025 06:11 AM

பொய்கைக்கரைப்பட்டி: அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டி ஊராட்சி நாயக்கன்பட்டி கிராமத்தில் போக்குவரத்து, சாக்கடை வடிகால்உட்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பரிதவிக்கின்றனர்.
இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சுற்றுச் சுவர் இன்றி ரோட்டின் அருகே பள்ளி உள்ளதால் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் கூறியதாவது:
மாணவர்கள் நலன் கருதி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். ரோட்டின் மட்டத்தை உயர்த்தி அமைத்ததால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. முறையான வடிகால் வசதியின்றி வீடுகளைச்சுற்றி கழிவுநீர் தேங்குகிறது. கொசு உற்பத்தி பெருகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அமைத்து அருகிலுள்ள ஓடையில் கழிவுநீர் செல்ல வழிவகுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
300 வீடுகளுக்கு ஒரேயொரு டிரான்ஸ்பார்மர் உள்ளதால் அடிக்கடி பழுதாகி இரவு நேரங்களில் மின்தடையால் அவதிப்படுகிறோம். 2 மேல்நிலைத் தொட்டிகள் இருந்தும் நேரத்திற்கு மின் மோட்டார் மூலம் குடிநீரை ஏற்ற முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது.
அதிகாலை 5:30 மணிக்கு உழவர்சந்தை செல்ல பஸ் உள்ளது. காலை 6:30க்கு வந்து காலியாக செல்லும்பஸ்சை காலை 8:00 மணிக்கு இயக்கினால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் பயன்பெறுவர். அதன்பின் மாலை 5:30க்கும், இரவு 8:30க்கும் பஸ் வருகிறது. மற்ற நேரங்களில் 1.5 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலையுள்ளது. கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றார்.

