/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயிரை பணயம் வைத்து ரேஷன் கடை செல்லும் மக்கள்
/
உயிரை பணயம் வைத்து ரேஷன் கடை செல்லும் மக்கள்
ADDED : ஆக 12, 2025 06:37 AM
கொட்டாம்பட்டி,: கச்சிராயன் பட்டியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக செல்லும் கார்டுதாரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
கச்சிராயன்பட்டி ரேஷன் கடையில் பரமநாதபுரம், புரண்டிபட்டி உள்ளிட்ட 3 கிராமங்களின் 500 க்கும் மேற்பட்டோர் கார்டு தாரர்களாக உள்ளனர்.
பகுதி நேர ரேஷன் கடையாக இருப்பதால் மாதம் 4 நாட்கள் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சிலநேரங்களில் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. பொருட்களை வாங்க மக்கள் திறந்த வெளியில் வெயில், மழைக்கு காத்து கிடக்கின்றனர். தவிர ரேஷன் கடையும் முழு வதும் சிதிலமடைந்து விட்டது.
கார்டு தாரர்கள் கூறியதாவது:
ரேஷன் கடை சுவர்களை கையால் தொட்டால் உதிர்கிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரிகிறது. முன்னறிவிப்பின்றி பொருட்கள் விநியோகிப்பதால் வேலை, வெளி யூருக்கு சென்றவர்களுக்கு தகவல் கிடைக்க தாமதமாகிறது. இதுபற்றி விற்பனையாளரிடம் கேட்டால் கணக்கு முடித்து விட்டோம் என்று சொல்வதால் ஏராளமான கார்டுதாரர்கள் பொருட்களை வாங்க முடியாமல் போகிறது.
இப்ப விழுமோ எப்ப விழுமோ என்கிற நிலையில் ரேஷன் கடை உள்ளது. சுவர் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் முன் அதிகாரிகள் ஆய்வு செய்து மராமத்து பார்க்கவோ, புதிய கடை கட்டவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.