ADDED : அக் 16, 2024 05:10 AM

மதுரை : மதுரை 36 வது வார்டு கோமதிபுரம் பகுதியில் 2, 6வது மெயின் ரோடுகள் ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் போக்குவரத்திற்குஉபயோகப்படுத்த முடியாதபடி சேறும், சகதியுமாக மாறியதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.
கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ராகவன் கூறியதாவது:
மேலமடை பகுதியில் நடந்து வரும் பாலப் பணிகளால் சிவகங்கை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அண்ணாநகர் செல்வோர் இப்பகுதியில் 2வது, 6வது மெயின் ரோடுகளை பயன்படுத்துகின்றனர். 2வது மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிந்து 6 மாதங்களாகியும் புதிய தார் ரோடு அமைக்க நிதி ஒதுக்கவில்லை.
1.2 கி.மீ., நீளமான 6வது மெயின் ரோடு கிரமப்புற நெடுஞ்சாலை பிரிவில் வருகிறது. இதில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தும் வீடுகளுக்கான இணைப்பு வேலை மிச்சம் உள்ளது. அவை முடிந்த பின் ரோடு அமைப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போதுஇவ்விரு ரோடுகளும் குண்டும் குழியுமாக உள்ளன.
நேற்று முன்தினம் பெய்த கனமழையால் இவ்விரு ரோடுகளிலும் அதிகளவு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு ஆளாகி இன்னல்களை சந்திக்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி தற்காலிக ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதி பாரதி தெருவில் மழைநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வித்தகர் வீதி, முத்தழகு வீதி, அல்லி வீதிகளில் காலி மனைகள், வீடுகளுக்குள்மழைநீருடன்கழிவுநீர் புகுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அடைப்பை உடனே சரிசெய்து, வாய்க்காலை துார்வார வேண்டும் என்றார்.