ADDED : செப் 17, 2025 12:25 AM
மதுரை: 'குடிநீர் குழாய் இணைப்புக்காக ரோடு, தெருக்களில் பள்ளம் தோண்டிவிட்டு பணி முடிந்தவுடன் அதை மூடாமல் சென்று விடுகின்றனர்' என அமைச்சர் தியாகராஜனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முறையிட்டனர்.
வாரம் ஒரு நாள் அமைச்சர் தியாகராஜன் தொகுதிக்குள் சென்று ஏதாவது ஒரு வார்டில் மக்கள் சந்திப்பு நடத்துகிறார். இதில் பங்கேற்க மேயர், கவுன்சிலர் போன்றோரை அழைப்பதில்லை. மூன்றாவது சந்திப்பு நிகழ்ச்சியாக மண்டலம் 3ல் 77வது வார்டு சுப்பிரமணியபுரம் பகுதியில் 7 தெருக்களுக்கு சென்று மக்களிடம் குறைகள் கேட்டார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவர்களிடம் குடிநீர் போதுமான நேரம் கிடைப்பதில்லை, தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. பேவர் பிளாக் பகுதியில் குடிநீர் இணைப்புக்காக குழாய் பதிப்பு பணிகள் நடந்தன. ஆனால் பணி முடிந்து பள்ளத்தை மூடாமல் விட்டுச் சென்றதால் பாதிப்பு உள்ளது என தெரிவித்தனர். மேலும் முதியோர் உதவித் தொகை, ஆதரவில்லா முதியோர் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருள் வழங்குதல் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.