/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
களை பறிக்கும் பணிக்கு ஆளின்றி தவிக்கும் பேரையூர் விவசாயிகள்
/
களை பறிக்கும் பணிக்கு ஆளின்றி தவிக்கும் பேரையூர் விவசாயிகள்
களை பறிக்கும் பணிக்கு ஆளின்றி தவிக்கும் பேரையூர் விவசாயிகள்
களை பறிக்கும் பணிக்கு ஆளின்றி தவிக்கும் பேரையூர் விவசாயிகள்
ADDED : நவ 04, 2024 05:44 AM
பேரையூர்,: பேரையூர் வட்டார பகுதிகளில் களையெடுக்கும் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர்களுக்கு இடையே நெட்டிக்குலை, தேங்காப்புல், துயில்கீரை, வெஞ்சா, கோரைப்புல், மத்தங்காபுல், பனிப்புல் உள்ளிட்ட களைகளும் வளர்ந்து வருகின்றன.
இவை முக்கிய பயிரை பாதித்து, மகசூல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கும் குறைவாக சாகுபடி செய்துள்ள சிறு விவசாயிகள் குடும்பத்துடன் வயலில் இறங்கி களைகளை பறித்து வருகின்றனர்.
இரண்டு ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு வரவழைத்து களைகளை அகற்றுகின்றனர். தாலுகா முழுவதும் விவசாயப் பணிகள் நடப்பதால் களைகளை அகற்ற ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் வேறு கிராமங்களில் இருந்தும் பெண் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் தவிப்பில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பருத்தி, குதிரைவாலி பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். பயிர்களினுாடே வளர்ந்துள்ள களைகளைபறிக்க விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலை 9:00 மணி முதல் - மதியம் 1:00 மணி வரை களை எடுக்கின்றனர். சம்பளமாக ரூ.300 வழங்குகிறோம். காபி, ஸ்னாக்ஸூம் உண்டு. இப்பணிக்கு வெளியூர் ஆட்களை அழைத்து வருவதால் கூடுதல் செலவாகிறது என்றனர்.