ADDED : செப் 25, 2026 06:44 PM
பேரையூர்: ‘மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது’ குறித்து டி.கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தாய் அந்து பூச்சி 100 முதல் 200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் மக்காச்சோள பயிரில் இலையின் அடிப்பகுதியில் இடும். இதை தவிர்க்க அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதைப்புக்குப்பின் ஒரு ஏக்கருக்கு 5 எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறியை வயலில் வைக்க வேண்டும். இதன் மூலம் ஆண் அந்து பூச்சிகளை அழிக்கலாம் .
15 முதல் 20 நாட்கள் வரை பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு குளோரன்டிரனில் புரோல் 18.5 சி.எஸ். மருந்து 0.4 மில்லி லிட்டர் அல்லது புளூ பென்ட மைட் 480 மருந்து 0.5 மில்லி லிட்டர் நீருக்கு என்ற அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். அதனை தொடர்ந்து தேவைப்பட்டால் அசாடிராக்டின் 1500 ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
