ADDED : நவ 12, 2024 05:19 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல திட்ட அலுவலர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பாலமேடு 73 செம்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பில் ரவி அளித்த மனுவில், ''பாலமேடு செம்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம்.
எங்கள் நிலத்தை சிலர் விலைக்கு கேட்டதற்கு கொடுக்க மறுத்ததால் எங்களுக்கு இடையூறு செய்யும் வகையில், நிலத்திற்கான பாதையை அடைத்து விட்டனர்.
விவசாய நிலங்களுக்குச் செல்ல பாதையை மீட்டுத் தர வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.
கச்சைக்கட்டி கிராமத்தினர் சார்பில் சமூக ஆர்வலர் ஞானசேகரன் அளித்த மனுவில், ''கச்சைக்கட்டியில் அதிகளவில் கல்குவாரிகள் உள்ளன. மேலும் ஒரு கல்குவாரி அமைப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நவ.,28ம் தேதி, 7 கி.மீ., தொலைவில் உள்ள கிராமத்தில் நடக்க உள்ளது.
அக்கூட்டத்தை கச்சைகட்டியிலேயே நடத்த வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

