ADDED : டிச 25, 2025 07:00 AM
திருப்பரங்குன்றம்: ''பியூஷ் கோயல் தனியாக வரவில்லை; அவர் வரும்போது சி.பி.ஐ., அதிகாரிகளையும் இ.டி. அதிகாரிகளையும் அழைத்து வந்துள்ளார்,'' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது:
காந்தி பெயரை நீக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ்.,- பிரதமர் மோடி செய்த சதியில் கூட்டாளியாக இருக்கும் அ.தி.மு.க.,வின் பழனிசாமியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அரசியல் செய்ய விரும்புகிறது. மதக்கலவரத்தை துாண்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல ஆண்டுகளாக முயற்சித்தவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
அங்கு அரசியல் செய்வதற்கு வெளியூர்காரர்களை அழைத்துவந்து பா.ஜ., செய்யும் சதித்தட்டங்களை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை.பியூஷ் கோயல் தனியாக வரவில்லை; வரும்போது அவருடன் சி.பி.ஐ., அதிகாரிகளையும் இ.டி. அதிகாரிகளையும் அழைத்து வந்துள்ளார். பியூஷ் கோயல், பழனிசாமி பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான். பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் நடக்கும் போட்டி அ.தி.மு.க., வின் இறுதி காலத்திற்கானது.
பா.ஜ., நுழையாத ஆட்சியை உருவாக்க வேண்டும். தமிழக மக்களுடைய பிரச்னைகளை மையப்படுத்துகின்ற ஆட்சியாக அந்த ஆட்சி அமையும் என்றார்.

