ADDED : டிச 07, 2025 08:56 AM

மதுரை: மதுரை செல்லுார் மீனாம்பாள்புரத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சம் செலவில் நாடக மேடை அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதியினர் கூட்டங்கள் நடத்தி வந்தனர். பல ஆண்டுகளாக மின் இணைப்பு, ஷட்டர் இல்லாத நிலையில் இருட்டை பயன்படுத்தி மது அருந்துவது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர்.
மேடையில் முகம் சுளிக்கும் அளவுக்கு காலி மது பாட்டில்கள் கிடப்பதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
கட்டடம் பாழடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேடையின் விளிம்பு சிதைந்த நிலையில் உள்ளது. அதன் வெளிச் சுவரில்பிளக்ஸ், போஸ்டர் ஒட்டி பாழ்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் வழிப்பறி தகராறில் ஒருவரை கொலை செய்த சம்பவமும்மேடையில் அரங்கேறியது.
நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறுகையில், ''சமூக விரோத செயல்கள் நடப்பதை தவிர்க்க மேடைக்கு மின் இணைப்பு கொடுத்து இரும்பு கேட் அமைத்து சீரமைக்க வேண்டும். மேடையை ஒட்டி செல்லுார் கண்மாய் ஓடை செல்வதால் அதன் சுவரில் நீர்நிலைகள் பற்றிய வரைபடங்கள், விழிப்புணர்வு வாசகத்தை இடம்பெறச் செய்யலாம் என்றார்.

