/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவகங்கை ரோடு பணியில் இதையும் கவனியுங்க ஆபீசர் கண்மாய் கரையோரமும் அகலமாகுமா
/
சிவகங்கை ரோடு பணியில் இதையும் கவனியுங்க ஆபீசர் கண்மாய் கரையோரமும் அகலமாகுமா
சிவகங்கை ரோடு பணியில் இதையும் கவனியுங்க ஆபீசர் கண்மாய் கரையோரமும் அகலமாகுமா
சிவகங்கை ரோடு பணியில் இதையும் கவனியுங்க ஆபீசர் கண்மாய் கரையோரமும் அகலமாகுமா
ADDED : டிச 06, 2025 05:48 AM

மதுரை: மதுரை - சிவகங்கை ரோட்டில் மேலமடை சந்திப்பைத் தாண்டி கண்மாய் கரையோரம் குறுகியுள்ள நான்கு வழிச்சாலையையும் அகலப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மேலமடையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.150 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி முடிந்து, டிச.7ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த மேம்பாலம் 1100 மீ., நீளம், 15 மீ., அகலத்திற்கும், அதன் கீழ் ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் தலா 7.5 மீட்டர்களிலும், வடிகால் தலா ஒன்றரை மீட்டர் எனவும் கட்டமைக்கப் படுகிறது.
மேற்கு பகுதியில் ஆவின் நிறுவனத்தின் 2வது வாயில் முன்பு துவங்கி கோமதிபுரம் வரை நீள்கிறது. இப்பாலம் முடியும் பகுதியைத் தொடர்ந்து ரோடு விரி வாக்கப்பணி நடக்கிறது.
இந்த ரோட்டில் ரிங்ரோடு அருகே வண்டியூர் கண்மாயின் கலுங்கு பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பாலம் உள்ளது. இதை 20 மீட்டராக அகலப்படுத்தும் திட்டம் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை யினர் தெரிவித்தனர். அதற்கேற்ப மேற்கில் இருந்து ரோட்டை சரிசெய்து வருகின்றனர்.
இந்தப் பாலத்திற்கும், மேலமடை சந்திப்பு பாலத்திற்கும் இடையே வண்டியூர் கண்மாய் கரை அமைந்துள்ளது. இதில் 15 ஆண்டுகளுக்கு முன் ராஜன் செல்லப்பா மேயராக இருந்த போது, ரூ.50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் பூங்கா, நடைப்பயிற்சி பாதை அமைக்கப் பட்டது.
கண்மாய் கரைக்கும், நெடுஞ்சாலைக்கும் இடையே ரோட்டோரம் குறுகலாக துவங்கி 25 மீட்டர் அகலத்தில் இந்த பகுதி உயரமாக அமைந்து உள்ளது. இதில் சில உப கரணங்களுடன் மரங்களும் உள்ளன.
தற்போது சிவகங்கை ரோட்டை சீரமைக்கும்போது இந்த பூங்காவை அகற்றி, ரோட்டை இன்னும் அகலப்படுத்தி இருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனெனில் தற்போது இப்பூங்கா முழுமையான செயல்பாட்டில் இல்லை. இப்பூங்காவில் உள்ள மரம் ஒன்று ரோடு வரை நீண்டு கிளை பரப்பி யுள்ளது. இதனால் விரைந்து வரும் கனரக வாகனங்களுக்கு விபத்து ஆபத்து உள்ளது.
எனவே வண்டியூர் கண்மாய் கரையை தேவைக்கேற்ப பலப்படுத்தி, பயன்பாட்டில் இல்லாத பூங்கா இடத்தையும் ரோடாக மாற்றினால் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் நெரிசல் ஏற்படாது.
நெடுஞ்சாலை அதிகாரி களிடம் கேட்டபோது, 'தற்போது நான்கு வழிச்சாலைக்கு தேவையான அளவு இடம் உள்ளது. பூங்கா பகுதியிலும் போதிய இடம் இருக்கிறது. கூடுதல் இடம் கிடைத்தால் ரோடு வசதியாக இருக்கும்' என்றனர்.

