ADDED : மே 27, 2025 01:09 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ம.க., மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் அளித்த மனு: தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணிபுரியும் செயலாளர்கள் சமீபத்தில் இடமாற்றப்பட்டனர். கருமாத்துாரில் இந்த விதி மீறப்பட்டுள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்திலும் முறைகேடு நடக்கிறது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தேசிய மனிதஉரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் பிச்சைவேல் அளித்த மனு: அரசு அலுவலகங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துவது நடைமுறையில் உள்ளது. மதுரை மேற்கு தாலுகா அலுவலகம் எவ்வித பாதுகாப்பும் இன்றி, வளாகத்தில் சமூகவிரோதிகள் செயல்பட ஏதுவாக உள்ளது. இங்கு பொதுமக்களின் முறைகேடு புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி விவசாயிகள் மனு: செட்டிக்குளத்தில் மறுகால் கலுங்கு கட்டாததால் 2021 பெருமழையில் கரை உடைந்தது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்கெனவே மனு கொடுத்தோம். கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றி உள்ளோம். இன்றுவரை பணிநடக்கவில்லை. பருவமழையால் குளம் நிரம்பி மீண்டும் கரை உடையும் முன்பு மறுகால் கலுங்கு கட்டவேண்டும்' என தெரிவித்திருத்தனர்.
* மதுரை மாரணி முனியாண்டி கோயில், நொண்டிச்சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் அனைத்து தரப்பு மக்களையும் அனுமதிக்க வேண்டும் என அக்கிராமத்தினர் மனு அளித்தனர். குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டி.என்.டி., ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.