/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆசிரியர், தலைமையாசிரியை உட்பட மூவர் மீது போக்சோ வழக்கு
/
மதுரையில் ஆசிரியர், தலைமையாசிரியை உட்பட மூவர் மீது போக்சோ வழக்கு
மதுரையில் ஆசிரியர், தலைமையாசிரியை உட்பட மூவர் மீது போக்சோ வழக்கு
மதுரையில் ஆசிரியர், தலைமையாசிரியை உட்பட மூவர் மீது போக்சோ வழக்கு
ADDED : நவ 08, 2025 02:03 AM
மதுரை: மதுரையில் பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியை மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை வசந்தநகரில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியர் ஜெயராம் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சைல்டு லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் 9, 7 ம் வகுப்பு படிக்கும் 7 மாணவியர் புகார் தெரிவித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பல கொடுமைகள் நடக்கின்றன. தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை இதற்கு உடந்தை. ஆசிரியர் ஜெயராம் மூலம் மாணவியருக்கு பாலியல் தொல்லை நடக்கிறது. நாங்கள் தலைமையாசிரியையிடம் தெரிவித்ததும், வகுப்பறை கண்காணிப்பு கேமராக்களை வெளியே மாட்டினார்கள். இதுகுறித்து கேட்டபோது 'உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள்' என்று சொன்னார்கள்.
வகுப்பறையில் எந்நேரமும் ஆபாச வார்த்தைகள் பேசுகிறார்கள். மாணவர்கள் வகுப்பறைக்கு மது அருந்தி வருகின்றனர். இதுகுறித்து தலைமையாசிரியையிடம் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளார்.
மாணவியரை ஜெயராம் தொட்டு பேசுகிறார். தொடக்கூடாத இடத்தில் தொடுகிறார். மாணவ, மாணவியரையும், பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் ஆசிரியர்கள் பேசுகிறார்கள். நாங்கள் செய்யாத குற்றத்திற்கு எங்களை தண்டித்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். ஆசிரியர் ஜெயராம், மாணவியரின் கால், இடுப்பில் தொடுவது, தவறான வீடியோக்களை காண்பிப்பது போன்ற செய்கையில் ஈடுபடுகிறார். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்அடிப்படையில் ஆசிரியர் ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோ சட்டத்தின்கீழ் திலகர்திடல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் கூறுகையில், ''மாணவியரின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு பிறகுதான் இதில் உள்நோக்கம் உள்ளதா, யாராவது துாண்டுதலின்பேரில் புகார் அளித்தார்களா, அரசியல் பின்னணி உள்ளதா என்பது போன்றவை தெரியவரும்,'' என்றனர்.

