ADDED : ஜூலை 31, 2025 06:14 AM

மதுரை : கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை போலீசாரின் நீதிமன்ற காவலை ஆக., 13 வரை நீட்டிப்பு செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், ஜூன் 28ல் நகை காணாமல் போன வழக்கு விசாரணையின் போது தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழு 16வது நாளாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் போலீசாரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக ஐந்து பேரும் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மனுவை விசாரித்த சி.ஜே.எம்., செல்வபாண்டி, ஐவருக்கும் ஆக., 13 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.