சிறுமி திருமணம்: ஒருவர் மீது வழக்கு
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே நேசநேரியை சேர்ந்த வசந்த் என்பவருக்கும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 30 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிறுமிக்கு விருப்பம் இல்லாத நிலையில் இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பிபுக்கான அரசின் 1098 என்ற எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் அளிந்த கள்ளிக்குடி ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் புதுமாப்பிள்ளை வசந்த் உள்பட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நகைக்கடையில் திருட்டு
மதுரை: மேலப்பனங்காடி வாகைக்குளம் மெயின் ரோடு சீனிவாசா நகர் ராமசாமி 44. தெற்குமாசி வீதி பச்சரிசிக்காரத் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கொலுசு வாங்க பெண் ஒருவர் வந்தார். பல டிசைன்களை பார்வையிட்டு ஒரு ஜோடியை தேர்வு செய்தார். தன் சகோதரி வெளியே நிற்பதாகவும் அவரை அழைத்து வருவதாகவும் கூறி கடையில் இருந்து சென்றவர் திரும்ப வரவில்லை. பின் கடையில் உள்ள நகைகளை சரிபார்த்தபோது ஒரு ஜோடி கொலுசு திருடப்பட்டது தெரிந்தது. ராமசாமி போலீசில் புகார் அளித்தார். சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ததில் மதுரை அருகே கார்சேரி ஆதிதிராவிடர் காலனி ஈஸ்வரன் மனைவி நாகமணி 29, திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளத்தில் விழுந்தவர் பலி
மதுரை: ஒத்தக்கடை மீனாம்பாள் நகர் பாலசுப்பிரமணியன் 67. அப்பகுதி சிவலிங்கா தியேட்டர் அருகே மது போதையில் தடுமாறிச் சென்றவர் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது அண்ணன் கணேஷ் பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

