ADDED : பிப் 03, 2025 05:36 AM
கழுத்தை அறுத்து கொலை: இருவர் கைது
டி.கல்லுப்பட்டி: பிள்ளைமார் தெரு முருகேசன் மகன் மணி. இவரிடம் மங்கம்மாள்பட்டி ராஜசேகர் டூவீலரை அடமானமாக வைத்து ரூ.25 ஆயிரம் பெற்றார். கடந்த வாரம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அடமானமாக வைத்த டூவீலரை ராஜசேகர் திருப்பி உள்ளார். கொடுத்த பணத்திற்கு வட்டி ரூ. ஆயிரம் தருமாறு மணி கேட்டதால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி மணியும், அவரது நண்பர்கள் சரவணன், சங்கர், பூமர் சரவணன் ஆகியோரும் டி.கல்லுப்பட்டி-பேரையூர் ரோட்டில் உள்ள மதுபான கூடத்திற்கு வந்து ராஜசேகர் மற்றும் பென்னி இருவரிடமும் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக சரவணன், சங்கர் ஆகியோரை கைது செய்த நிலையில் மணி மற்றும் பூமர்சரவணன் இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சமாதானம் செய்வதாக ராஜசேகர், கடன்வழங்கிய மணியின் தந்தை முருகேசனிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை ராஜசேகரன் மங்கம்மாள்பட்டி சுடுகாடு அருகே முருகேசனை அழைத்துச் சென்றார். அங்கு முருகேசன், ராஜசேகர், பென்னி மற்றும் மூவர் மது அருந்தினர். போதையில் பேசிய போது வாய் தகராறு ஏற்பட்டு முருகேசனை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். உடலை சுடுகாட்டிலும், தலையை டி.கல்லுப்பட்டி டாஸ்மாக் பாரிலும் போட்டுவிட்டு தப்பினர். விசாரித்த போலீசார் ராஜசேகரன் 33. அணைக்கரைப்பட்டி பென்னி 27, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைது
மேலுார்: பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த 15 வயது மாணவி தனியார் பள்ளியில் படிக்கிறார். இவரை கீழையூர் ராஜா மனோஜ் 31, பள்ளிக்குச் செல்லும் போது பின் தொடர்ந்து சென்று தொந்தரவு, கேலி செய்யவே இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா மனோஜை கைது செய்தார்.
புகையிலை விற்றவர் கைது
மேலுார்: எஸ்.ஐ., ஜெயக்குமார் தும்பை பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது கடையில் புகையிலை விற்ற டி. அம்பலகாரன்பட்டி ரமேஷை 43, கைது செய்து 30 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
மேலுார்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆறுமுகம் 52, டிரைவர். நேற்று முன்தினம் இரவு வேனில் தெற்கு தெரு பகுதியில் சென்றபோது அதே பகுதி ஜீவானந்தம் 63, போதையில் வேனை மறித்து தகராறு செய்தார். கொலை மிரட்டல் விடுக்கவே எஸ்.ஐ., ஆனந்த ஜோதி கைது செய்தார்.