55 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை: வண்டியூர் பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., சீனிவாசபெருமாளின் தனிப்படையினர் 4 சரக்கு வாகனங்கள், கோடவுனை சோதனையிட்டனர். அதில் 55 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்தனர். அவற்றின் உரிமையாளர்கள் வண்டியூர் மீனாட்சிசுந்தரம், முத்துக்கண்ணன் விசாரித்தபோது வெளியூர்களில் வாங்கி குருணையாக்கி கோழிப் பண்ணைகளுக்கு தீவனமாக அனுப்பி வருவது தெரிந்தது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஒருவர் பலி
மேலுார்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சிவன் பிள்ளை 57. ஒர்க் ஷாப் நடத்தினார். நேற்று சென்னையில் இருந்து ஜீப்பில் சொந்த ஊருக்கு திரும்பினார். மதியம் 12:00 மணிக்கு மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் திருச்சியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், சிவன்பிள்ளை சென்ற ஜீப் மீது மோதியதில் அவர் இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி மோதி பெண் பலி: மறியல்
திருமங்கலம்: கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி 45. இவரது கணவர் பெரியசாமி தனக்கன்குளம் ஊராட்சி துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் காலை இருவரும் பேரன் சிவநித்திஷ் உடன் டூவீலரில் விருதுநகர் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் மொட்டமலை அருகே வந்தபோது லாரி மோதியதில் மகேஸ்வரி இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். லாரியுடன் தலைமறைவான டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் கப்பலுார் டோல்கேட் அருகே மறியலில் ஈடுபட்டனர். ஒரு கி.மீ., துாரம் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதித்தது. தாசில்தார் சுரேஷ், ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

