விவசாயிகள் பலி
கொட்டாம்பட்டி: பொன்னமராவதி ஒளிமங்கலம் ராஜூ 57, மதுரை பாண்டி கோயிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் 17 பேரை வேனில் அழைத்து சென்றார். வேனை பேயன்வலையபட்டி மாணிக்கம் 55, ஓட்டினார். நேற்று மாலை பாண்டி கோயிலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர். சின்ன கொட்டாம்பட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற டிராக்டரை வேன் டிரைவர் முந்த முயன்றார். பின்னால் லாரி வரவே டிரைவர் இடது பக்கமாக வேனை திருப்ப டிராக்டர் மீது மோதியது. இதில் வேன் படிக்கட்டில் அமர்ந்திருந்த விவசாயி சுப்பையா இறந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
* டி.கல்லுப்பட்டி: செல்லாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் வெயில்முத்து 18. இவர் டூவீலரில் டி. கல்லுப்பட்டியில் இருந்து எல்.கொட்டாணிப்பட்டி சென்றார். நிலை தடுமாறிய அவர் கொட்டாணிப்பட்டி அருகே பாலத்தின் மீது மோதியதில் இறந்தார். கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் விழுந்தவர் மீட்பு
உசிலம்பட்டி: செட்டியபட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தகுமார் 26. ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை இவரது ஆடுகளுக்கு தீவனத்திற்காக அருகில் உள்ள கிணற்றில் வளர்ந்திருந்த மரங்களில் இருந்து இலைதழைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தடுமாறி 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தார். தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் எழ முடியாமல் தவித்தார். அவரை கயிறு கட்டி மேலே துாக்கி சிகிச்சைக்கு அனுப்பினர்.
ஓய்வு அதிகாரியிடம் திருட்டு
மதுரை: கட்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 73. ஓய்வு பெற்ற ஹிந்து அறநிலைய துறை மேலாளர். பெரியார் பஸ் ஸ்டாண்டில் முதல் பிளாட்பாரத்தில் பஸ்சிற்காக மகனுடன் காத்திருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அலைபேசியை மர்ம நபர் திருடிச் சென்றார். திடீர்நகர் போலீசார் விசாரித்து தேனி உத்தமபாளையம் சலீமை 63 கைது செய்தனர்.
4 சிறுவர்கள் கைது
மதுரை: சுடுதண்ணீர் வாய்க்கால் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் 65. அப்பகுதியில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கடையை திறந்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. வெள்ளிப் பொருட்கள், பணம் திருடுபோயிருந்தது. சி.சி.டி.வி., கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில் 4 சிறுவர்கள் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.
-டூவீலர் திருட்டு
புதுார்: சங்கர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர்செல்வக்குமார். நேற்று தன்வீட்டின்முன் டூவீலரை நிறுத்தியிருந்தார். மாலை கடைக்குச் செல்வதற்காக பார்த்தபோது டூவீலர் திருடுபோனது தெரிந்தது. சி.சி.டி.வி., அடிப்படையில் கண்ணனேந்தல் நந்தகுமாரை 19, புதுார் போலீசார் கைது செய்தனர்.