போலீஸ் குடும்பத்திற்கு நிதியுதவி மதுரை: கூடல்புதுார் ஏட்டு கார்த்திகைராஜா, விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஏட்டு காசிவிஸ்வநாதன். இருவரும் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தின் நலன்கருதி அவர்களது 2003 பேட்ச் சக போலீசார் 'உதவும் கரங்கள்' அமைப்பின்மூலம் தங்களது சொந்த செலவில் இருந்து தலா ரூ.27.89 லட்சம் நிதியுதவி அளித்தனர். இது இவர்களின் 90வது பங்களிப்பு.
காரில் நகை திருடியவர் கைது மதுரை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் மேனகா 27. குடும்பத்துடன் திருச்செந்துார் சென்றுவிட்டு காரில் மதுரை திரும்பினார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் உறவினரை வழியனுப்புவதற்காக ஐ.டி., பார்க் கட்டப்பட உள்ள இடம் அருகே காரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்தபோது 23 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக மேலுார் கருப்பையா காலனி மணிகண்டனை 34, மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் தாக்குதல் மதுரை: தத்தனேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை காவலாளி கருப்பையா 80. பணியின்போது மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற மேலுார் கஸ்துாரிபாய் நகர் மஸ்தான்அலியை 33, தடுத்து விசாரித்தபோது தாக்கப்பட்டார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடத்தப்பட்ட பஸ் கண்டுபிடிப்பு மேலுார்: சந்தைப்பேட்டை சித்திக் 38. தனியார் பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு மேலுார் -- மதுரை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்தியிருந்தார். அதை மர்மநபர் கடத்திச்சென்றார். போலீசார் தேடிய நிலையில் நத்தத்தில் பஸ் நிற்பது தெரிந்தது. கடத்தியவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவன் பலி
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே பேய்குளத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் மனோ 9. அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் மீன் பிடிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.