
பீஹார் இளைஞர்கள் 4 பேர் மயக்கம்
மதுரை: கீரைத்துறை நல்லமுத்துபிள்ளை தெருவை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது ரைஸ்மில்லில் உள்ள பாய்லரில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. இதில் பீஹார் மாநில தொழிலாளர்கள் பவுன்குமார் 24, விஷால் 24, ராஜினிஸ் 22, அஸ்தோஷ் 25 ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு காரணமாக திடீரென மயங்கினர். அவர்களை அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் அசோக்குமார், கணேஷ் தலைமையில் வீரர்கள் திருநாவுக்கரசு, காசிராஜன், பாலமுருகன், முருகேஸ்வரன், சதீஷ்பாண்டி ஆகியோர் மீட்டனர். 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாபாரிகள் கைது: தள்ளுமுள்ளு
மதுரை: தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை இயங்கிய நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. நேற்று வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காத நிலையில் போலீசார் கைது செய்தபோது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மூவர் கைது
மேலுார்: எஸ்.ஐ., ஜெயக்குமார் கொட்டகுடி, நரசிங்கம்பட்டி பகுதிகளில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற கவிதா 58, சீனிமுத்து 65, வைரமணி 57, ஆகியோரை கைது செய்து 5 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தார்.
குறுக்கே வந்த நாயால் இளைஞர் பலி
சோழவந்தான்: சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- - திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார்.
மது விற்றவர் கைது
பேரையூர்: சாப்டூர் முருகன் 52. அதே ஊரில் அரசு அனுமதியின்றி வீட்டில் மது விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற எஸ்.ஐ., அருள்ராஜ் கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
திருமங்கலம்: செங்கப்படையை சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ரேணுகாதேவி 58. அதே ஊரைச் சேர்ந்த கணேசன் தோட்டத்தில் உளுந்து செடிகளை பறிக்கும் வேலைக்கு சென்றார். தரம் பிரிக்கும் இயந்திரத்தில் செடிகளை போடும்போது அவரது கை இயந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் ரேணுகாதேவி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

