UPDATED : ஜூலை 16, 2026 06:27 PM
ADDED : ஜூலை 16, 2026 06:16 PM
மதுரை: கள்ளந்திரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் மீது சாணம் வீசப்பட்டது. உட்கட்சி பிரச்னையால் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் வி.சி.க.,வினர் அப்பன்திருப்பதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
போலீஸ் மீது அவதுாறு: ஒருவர் மீது வழக்கு
மதுரை: மேலுார் பகுதியில் சில நாட்களுக்கு முன் விபத்தில் சீமைராஜா என்பவர் இறந்தார். இவரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்ததாக கூறி மணிசேதுபதி என்பவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். பொது அமைதியை குலைத்து கலவரத்தை துாண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக மணிசேதுபதி மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண் வழக்கறிஞர் குறித்து அவதுாறு
மதுரை: மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் பெண் ஒருவரின் படத்தை மர்மநபர் பயன்படுத்தி இன்ஸ்டா சமூகவலைதளத்தில் போலி ஐ.டி., உருவாக்கி, சக ஆண் வழக்கறிஞர்களுக்கு தவறான நோக்கத்துடன் 'அப்லோடு' செய்தார். பெண் வழக்கறிஞர் புகாரில் மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆபாச படம் காட்டியவர் மீது வழக்கு
மதுரை: ராஜாக்கூர் ஆட்டோ டிரைவர் பிரபு 40. இவரது வீட்டருகே ஒரு பெண் தனியாக இருப்பதை அறிந்து, கதவு வழியாக அலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்ததாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏட்டுவை தாக்கிய மூவர் சரண்
திருமங்கலம்: பெருங்குடி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ராஜாவை ஜூலை 14ல் மூன்று பேர் கற்கள், ஆயுதங்களால் தாக்கினர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துக்காளை 32, அவரது சகோதரர் முத்துப்பாண்டி 30, முகேஷ் 21, ஆகியோர் நேற்று திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு சரணடைந்தனர்.
