/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதநல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதாக வழக்கு; மதுரை ஆதினத்திடம் போலீசார் மீண்டும் விசாரணை யார் துாண்டுதல் என கேள்வி

ADDED : நவ 02, 2025 03:44 AM

மதுரை: சென்னை செல்லும் வழியில் தன்னை குறிப்பிட்ட மத அடையாளங்களை கொண்ட இருவர் காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதினம் குற்றம்சாட்டிய நிலையில், மதநல்லிணக்கத்திற்கு எதிராக அவர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கில் நேற்று மதுரை மடத்தில் அவரிடம் சென்னை போலீசார் 20 நிமிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த மே 2ல் சென்னை காட்டாங்கொளத்துாரில் நடந்த சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் உளுந்துார்பேட்டையில் தன் கார் மீது மற்றொரு காரை மோத செய்து விபத்தை ஏற்படுத்தியதாகவும், குல்லா, தாடி வைத்திருந்த நபர்கள் கொலை செய்ய முற்பட்டதாகவும்கூறி ஆதினம் குற்றம்சாட்டினார். போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தவறான தகவல்களை பரப்பி மதமோதலை துாண்டும் வகையில் பேசியதாக ஆதினத்தின் மீது சென்னை வழக்கறிஞர் ராஜேந்திரன் புகாரில், சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆதினத்திற்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம், அவரிடம் விசாரிக்க தடையில்லை என தெரிவித்தது.
ஜூலை 20ல் மடத்தில் ஆதினத்திடம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில் விசாரணை நடந்தது. அப்போது ஆதினம் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், படுக்கையில் இருந்தவாறே விசாரணையை எதிர்கொண்டார்.
நேற்று மீண்டும் ஆதினத்திடம் அதே போலீசார் விசாரணை நடத்தினர். மதநல்லிணக்கத்திற்கு எதிராக பேச துாண்டியது யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் போன்ற கேள்விகளை கேட்டனர்.
ஆதினம் தரப்பு வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் உடனிருந்தார். 20 நிமிட விசாரணைக்கு பிறகு போலீசார் புறப்பட்டு சென்றனர். விரைவில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.