/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசாரின் மனஅழுத்தம் போக்கும் மகிழ்ச்சி திட்டம் மதுரையில் துவக்கம்
/
போலீசாரின் மனஅழுத்தம் போக்கும் மகிழ்ச்சி திட்டம் மதுரையில் துவக்கம்
போலீசாரின் மனஅழுத்தம் போக்கும் மகிழ்ச்சி திட்டம் மதுரையில் துவக்கம்
போலீசாரின் மனஅழுத்தம் போக்கும் மகிழ்ச்சி திட்டம் மதுரையில் துவக்கம்
ADDED : பிப் 19, 2024 05:47 AM

மதுரை : ''போலீசாரின் மன அழுத்தத்தை போக்க வந்தது மகிழ்ச்சி திட்டம். இதனை தமிழகம் முழுவதும் துவங்க வேண்டும்'' என மதுரையில் நடந்த துவக்க விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசினார்.மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று மகிழ்ச்சி திட்டம் துவங்கப்பட்டது. டி.ஐ.ஜி ரம்யா பாரதி வரவேற்றார்.
திட்டத்தை அறிமுகப் படுத்திய மூத்த மனநல ஆலோசகர் டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், ''எனது ஐம்பதாண்டு அனுபவத்தில் போலீசாருக்கு மகிழ்ச்சி திட்டம் தொடங்கியதை சிறப்பாக கருதுகிறேன். ஒன்றரை லட்சம் போலீசாரும், மூன்றரை லட்சம் போலீசாரின் குடும்ப நலன்களும் இதில் அடங்கியுள்ளது. மகிழ்ச்சி திட்டம் மன அழுத்தத்திற்கான விழிப்புணர்வு வழங்குவதோடு, அதிலிருந்து முழுமையாக விடுவிக்கிறது. சென்னையில் தொடங்கி வெற்றி கண்டதை, இன்று மதுரையில் துவக்கியுள்ளோம், என்றார்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசியதாவது: மன அழுத்தம் எல்லோருக்கும் இருக்கும். அதனை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த மகிழ்ச்சி திட்டம்.
இதில் ஆயிரம் பேர் பங்கேற்று, அவர்களில் 10 பேர் பயன்பெற்றாலும் இது வெற்றிதான். போலீசார் தங்கள் மன அழுத்தத்தை வெளிப்படுத்த ஒரு ரகசிய அஞ்சல் முகவரி எண் கொடுத்திருந்தோம். அது வெளியில் தெரிந்ததால் ஏராளமானோர் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்தனர். தங்கள் பிரச்னை, குடும்பத்தில் உள்ள சங்கடங்களை வெளிப்படையாக கூறினர்.
எனவேதான் இந்த திட்டத்தை சென்னைக்கு மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டோம். அடுத்த நடவடிக்கையாக மதுரையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். அதற்கான நிதியை அரசாங்கம் தர முன்வந்துள்ளது.
மதுரை கமிஷனர் லோகநாதன் இதற்கான நிதி ரூ.10 லட்சத்தை தானே முன்வந்து ஒதுக்கீடு பெற்று வந்துள்ளார் என்றார்.இந்நிகழ்ச்சியில் விடுப்பு செயலி தொடங்கிய டி.ஜி.பி., அந்த அலைபேசியை 3 போலீசாருக்கு வழங்கினார். மனநலம் காத்தல் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. பெங்களூரூ தேசிய மனநல நிறுவன ஆலோசகர் சேகர், தென்மண்டல ஐ.ஜி, கண்ணன், கமிஷனர் லோகநாதன், போலீஸ் நல்வாழ்வு துறை தலைவர் நஜ்மல் ேஹாடா பங்கேற்றனர். திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மூர்த்தி நன்றி கூறினார்.

