/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி தயிர் மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் அரசியல் நெருக்கடி; ஆளும்கட்சி - எதிர்க்கட்சி 'கூட்டணியால்' அதிகாரிகள் திணறல்

ADDED : அக் 01, 2025 07:38 AM

மதுரை: மதுரை மாநகராட்சி தயிர் மார்க்கெட் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் 'கூட்டணி' சேர்ந்து மாநகராட்சிக்கு கொடுக்கும் நெருக்கடிகளால் அதிகாரிகள் திணறுகின்றனர். மதுரை கீழமாரட் வீதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தயிர் மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது புதுப்பிக்கப்பட்டு மொத்தம் 84 கடைகளில் 42 கடைகளை மூன்று தலைமுறையாக வியாபாரம் செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், பிற கடைகளுக்கு பொது ஏலம் முறையிலும் ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்தது.
ஏலம் விடும் முடிவுக்கு ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தாங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதாவது 'ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட கடைகளை மாநகராட்சி ஒதுக்க வேண்டும். அதை யாருக்கு ஒதுக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். ஏலம் விட வேண்டாம்' என கட்டாயப்படுத்தினர். இதனால் கடைகள் ஒதுக்கீடு செய்வதை மாநகராட்சி தள்ளி வைத்தது.
வருவாய் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக கட்டி பிப்ரவரியில் திறக்கப்பட்டும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. சில வியாபாரிகள் நாங்களும் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வந்தோம் என உரிய ஆதாரம் காட்டி கடை கேட்கின்றனர்.
இதையடுத்து 66 கடைகளை பழைய வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கும் அரசியல் ரீதியாக சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும் 18 கடைகளுக்கு பொது ஏலம் விடலாம் என முடிவு செய்தால், தி.மு.க., மார்க். கம்யூ., அ.தி.மு.க., ம.தி.மு.க., என முக்கிய கட்சி பிரதிநிதிகள் 'நாங்களும் வியாபாரிகள் தான்' என்ற பெயரில் தங்கள் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் கடைகளை நேர்மையான முறையில் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சொத்துவரி முறைகேட்டால் ரூ.பல கோடி வருவாய் இழந்து தவிக்கும் மாநகராட்சிக்கு, இதுபோன்று வருவாய் தரும் கடைகளை ஒதுக்கீடு செய்வதிலும் அரசியல் குறுக்கீடுகள் வருவதால் அதிகாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். அமைச்சர் மூர்த்தி தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.