
ராமரின் வாழ்வோடு கலந்துவிட்ட அயோத்தியில் அவரது கோயில் கும்பாபிேஷகம் (ஜன.௨௨., ௨௦௨௪) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அயோத்தியில் ஓடும் சரயு நதி ராமரின் வாழ்வின் அனைத்து சம்பவங்களுக்கும் சாட்சியாக பல ஆயிரம் ஆண்டுகள் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த அற்புத நதியை பார்ப்பதே புண்ணியம்.
ராமருக்கு பட்டாபிேஷகம் நடந்த மாளிகை 'கனக்பேலஸ்' என்ற பெயருடன் இங்கு உள்ளது. அதே போல சீதா தேவி சமைத்து பலருக்கும் உணவு படைத்த கூடம் இங்கு உள்ளது.
ராமரின் முதல் பக்தனாக இருந்த அனுமனுக்கு 'ஹனுமன் கர்ஹி' என்ற தனிக்கோயில் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ராமர் பிறந்து வளர்ந்த இடமான ராஜஜென்ம பூமி உலகமே வியந்து பார்க்கும் விதமாக பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.
1988ல் ஆமதாபாத்தைச் சேர்ந்த சோம்புரா குடும்பத்தால் ராமர் கோயில் வடிவமைக்கப்பட்டது. சோம்நாத் கோயில் உட்பட உலகளவில் 100க்கும் மேற்பட்ட கோயில்களை சோம்புரா குடும்பத்தினர் வடிவமைத்துள்ளனர்.
வாஸ்து சாஸ்திரப்படி கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 235 அடி (72 மீ.,) அகலம், 360 அடி (110 மீ.,) நீளம், 161 அடி (49 மீ.,) உயரம் கொண்டுள்ளது. இது நாகரா பாணி கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும்.
எண்கோண வடிவ கருவறையில் ஐந்து வயது குழந்தை ராமர் விக்ரஹம் வைக்கப்படும். பிரார்த்தனை கூடம், விரிவுரை மண்டபம், பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக கோயில் மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தளத்தை பார்வையிட முடியும். கோயிலின் கட்டுமானத்தில் இரும்பின் உபயோகம் இருக்காது. கல் துாண்கள் பத்தாயிரம் செப்புத் தகடுகளால் இணைக்கப்பட்டுள்ளது.
1800 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டு தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படும் ராமர் கோயில் கட்டுமான செலவு முழுவதும் பக்தர்களின் நன்கொடை என்பது முக்கியமான விஷயம். செங்கல், மணிகள், பளிங்கு கற்கள் என்று கோயிலுக்கு தேவைப்படும் பல பொருட்கள் நாடு முழுவதும் உள்ள பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலத்தில் உள்ள அயோத்தி என்பது சிறிய ஊர்தான். மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 167 கி.மீ., வாரணாசியிலிருந்து 203 கி.மீ., டில்லியிலிருந்து 605 கி.மீ., தொலைவிலும், பைசாபாத் நகரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம், புதிய விமான நிலையம் என எல்லாம் பைசாபாத்தில் அருகில் உள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவையும் கும்பாபிேஷகத்தையும் நாடு முழுவதும் கொண்டாட இருக்கின்றனர். அயோத்தி நகர மக்களைப் பொறுத்தவரை பல வருடங்களாக அனுதினமும் குழந்தை ராமரை மனதில் இருத்தி வழிபட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கான்கீரிட் வீட்டை அரசு கட்டிக் கொடுத்து உள்ளது. சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன,
பள்ளிகள் புதுப்பிக்கபடுகின்றன, மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படுகின்றன, மக்களுக்கான பொருளாதார ஏற்றம் தரும் தொழில் கூடங்கள் உருவாகின்றன.
இவையெல்லாம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்கள். இவ்வளவு அற்புதம் நடப்பதற்கு காரணம் ராமர் ஒருவரே.