ADDED : ஆக 22, 2025 03:32 AM

சோழவந்தான்: சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
சமூக ஆர்வலர் கவுரிநாதன்: நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. வாடிப்பட்டி செல்லும் அனைத்து வாகனங்களும் இதன் வழியே செல்கின்றன. மேலும் வாடிப்பட்டி, நகரி ரோட்டில் அமைந்துள்ள ஆசிரியர் காலனி, பசும்பொன்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பாலத்தை கடந்து ஊருக்குள் வருகின்றனர்.
இந்நிலையில் பாலத்தின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு ஆங்காங்கே பல்லாங்குழி போன்று பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. ஏற்கனவே ஏற்பட்ட பள்ளங்களை அதிகாரிகள் சரி செய்தும் மீண்டும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால் சைக்கிள், டூ வீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படாதவாறு பாலத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'ஏற்கனவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை 'பேட்ச் ஒர்க்' செய்து சரி செய்தும், பள்ளங்கள் ஏற்படுகிறது. இதனால் புதிய முறையில் கலவைகள் மூலம் மூடத்திட்டமிட்டுள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என்றார்.