ADDED : செப் 09, 2026 05:42 PM
மேலுார்: மேலவளவு கருப்புசுவாமி கோயிலில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தலைவர் முருகன் தலைமையில் கூட்டு பிரார்த்தனை செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முருகன் கூறியதாவது: எல் நினோ பாதிப்பால் தென்மேற்கு பருவமழை பொய்த்து மதுரை மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தோம். பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததும் இரு போக மற்றும் ஒருபோகத்திற்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். விவசாய பணிகள் நடக்கும் அக்., நவ.,ல் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும். குளங்களை மழை நீரை கொண்டு நிரப்ப வேண்டும். பெரியாறு நீரை பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் திறப்பதற்கு முன் விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றார்.
