ADDED : ஜூன் 29, 2025 05:00 AM

குழந்தைப்பேறுக்கு திட்டமிடும் தம்பதியர், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக தங்களது குடும்ப நல, மகப்பேறு நல டாக்டரை சந்தித்து 'கவுன்சிலிங்' பெற வேண்டும். உடல்நலம், வாழ்க்கை முறை, இருவரின் உடல்நலம் குறித்த முந்தைய மருத்துவ வரலாறு, அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் பற்றி டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கர்ப்பகால சிக்கல்களை குறைத்து தாய், சேய் நலம் காக்க முடியும்.
கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஆலோசனை பெறுவது அவசியம். 'போலிக் அமில' மாத்திரையை உட்கொண்டால் சிசுவுக்கு நரம்புக்குழாய் குறைபாடு தடுக்கலாம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, இதயநோய், வலிப்பு நோய், மனநோய் இருந்தால் அதற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும். சில மருந்துகளை மாற்ற வேண்டியிருக்கலாம் அல்லது சில மாத்திரைகளின் அளவை மாற்ற வேண்டியிருக்கும். அப்போது தான் பிரசவ காலத்தில் சிக்கலின்றி உடல்நிலை சீராக இருக்கும்.
முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்திருந்தால் அடுத்த குழந்தைப்பேறுக்கு இரண்டாண்டு இடைவெளி விட வேண்டும்.
நுரையீரல் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு குறைவு, சிறுநீரக முழு செயலிழப்பு, இதயத்தசை நோய் போன்ற பிரச்னைகள் இருந்தால் கர்ப்பம் தரிப்பது சிலநேரம் ஆபத்தில் முடியலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக ஆலோசனை பெறுவதன் மூலம் தாய் சேய் நலம் காத்து இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.
கருவின் குறைபாடுகளையும் கருக்கலைப்பையும் குறைக்க முடியும். குறைமாத பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பையும் தவிர்க்கலாம். பாதுகாப்பாக கர்ப்பம் தரித்து சுகமாக பிரசவிக்கலாம்.
டாக்டர் முழு உடல் பரிசோதனை செய்து, கருவுறுதலுக்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்வார். ஹெபடிட்டிஸ் பி, கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி (எச்.பி.வி.,), ரூபெல்லா தடுப்பூசிகளை முன்கூட்டியே போடுவது பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான உணவு, உறக்கம், உடற்பயிற்சியுடன் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
- டாக்டர் ஓ.வி.சி.ஸ்ரீதேவி
மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு நிபுணர், மதுரை
98948 59784