ADDED : டிச 18, 2024 05:46 AM

தேனீக்களில் முக்கியமானது கொடுக்கு இல்லாத கொசுத்தேனீக்கள். தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் இவற்றின் பங்கு அதிகம்.
மற்ற தேனீ வகைகளில் இருப்பதை போலவே ராணி தேனீ, ஆண், வேலைக்கார தேனீ வகைகள் என்று கூட்டமாக வாழ்கின்றன. சுவர், மர இடுக்குக்குள் இருக்கும் சிறிய சந்து பொந்துக்குள் இருளில் மறைந்து வாழ்கின்றன. வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது. மதுரம், மகரந்தம், தண்ணீர் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. பிசின், மண், மணல், சிறிய துகள் போன்ற மரக்குச்சிகளை கூடு கட்ட பயன்படுத்துகின்றன.
சில வகை கொசுத்தேனீக்கள் உயரமான பகுதிகளை தேர்ந்தெடுத்து கூடு கட்டுகின்றன. பயன்படுத்தாமல் இருக்கும் மரத்தண்டுகள், பழைய எறும்புக்கூடுகள், வீட்டுச்சுவர்கள், கதவு பொந்துகளில் கூடு கட்டுகின்றன. ஒரு கூட்டில் ஒரு ராணியும் சில நுாறு ஆண் தேனீக்களும் பல ஆயிரம் வேலைக்கார தேனீக்களும் வசிக்கும். பல்லி, எறும்பு, சிலந்தி, மெழுகு அந்துப்பூச்சி இவற்றின் இயற்கை எதிரிகள்.
ராணித்தேனீ கூட்டிலிருந்து பறந்து வந்து மற்ற கூட்டத்தில் உள்ள ஒரு ஆண் தேனீயுடன் பறக்கும் போது இனச்சேர்க்கை செய்யும். கருத்தரித்த முட்டையிலிருந்து வேலைக்கார தேனீக்களும் கருத்தரிக்காத முட்டையிலிருந்து ஆண் தேனீக்களும் வளர்கின்றன. ராணித்தேனீ சுரக்கும் 'ப்ரமோன்' வேதிப்பொருளால் கூட்டின் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்கிறது.
வேலைக்கார தேனீக்கள் தேன்பால் சுரந்து புழுக்களுக்கு ஊட்டுவது, தேன், மகரந்தம் சேகரிப்பது, கூட்டை செய்வது, பாதுகாப்பது போன்ற வேலைகளை செய்கின்றன. ஆண் தேனீக்களின் வேலை இனச்சேர்க்கை மட்டுமே. இவை இளம்பழுப்பு நிறத்தில் காணப்படும். உணவு அதிகம் கிடைக்கும் சீசனில் கூட்டமாக தேனீக்கள் வெளியில் செல்லும்.
தேன், மகரந்தம் சேகரிக்கும் இடத்தை மற்ற தேனீக்களுக்கு அறிந்து கொள்ள அதற்கான 'ப்ரமோன்' வேதிப்பொருட்களை வெளிப்படுத்தி செயல்படுகின்றன. வறண்ட கால நிலைகளில் அதிகாலை முதல் மாலை வரை தேனீக்கள் பூக்களில் இருந்து தேன், மகரந்தம் சேகரிக்கின்றன. கூட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிலோமீட்டர் சுற்றளவு வரை செல்லும். தேவைப்பட்டால் மரத்தண்டு, பூ , மொட்டு, இலைகளில் இருந்து ரெசின் எனப்படும் பிசினையும் சேகரிக்கின்றன.
தேன் கூட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கூட்டின் வாயிலில் வேலைக்கார தேனீக்கள் காவல் செய்கின்றன. இரவில் எறும்பு, வண்டுகள் நுழைவதை தடுக்கும் வகையில் 'புரோபோலிஸ்' பிசின் கொண்டு வாயிலை அடைத்து மூடிவிடுகின்றன. மறுநாள் காலையில் வாயிலை திறந்து விடும் அற்புத ஆற்றல் உடையவை. சிலநேரங்களில் அத்துமீறி உள்ளே நுழையும் எதிரிகளை பிசின் மெழுகால் மூடி அவற்றை மடிய வைக்கின்றன. மனிதர்களோ, விலங்குகளோ தொந்தரவு செய்தால் கண், காது, மூக்கு, வாய்ப்பகுதிகளில் நுழைந்து கடிக்கும். இதனால் வலி, தோல் எரிச்சல் ஏற்படும்.
இவை தேன், மகரந்த உற்பத்திக்கு மட்டுமின்றி ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கும் உதவுகின்றன. சிறிய உயிரினமாக இருப்பதால் காட்டில் உள்ள மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு அதிகம் பயன்படுகிறது. பாலித்தீன் குடில் அமைத்து நவீன தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்யும் போது அங்குள்ள செடி, கொடிகளின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றன.
ரொட்டி, குக்கீஸ், பிஸ்கெட் உணவுகளில் இந்த தேனை பயன்படுத்தலாம். இதன் மகரந்தம் குழந்தைகளுக்கான உணவு, அழகுசாதன தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 'புரோபோலிஸ்' பிசின் மருந்துப்பொருளாகிறது. இத்தாலி தேனீக்களை போல இவற்றையும் வளர்க்கலாம். இவை வாழும் இடங்களில் கூடு பெரிதாக இருந்தால் அவற்றை இரண்டாக பிரித்து வளர்க்கலாம். ஒருமுறை கூட்டை எடுத்து வந்தால் போதும். மரப்பெட்டி, மண்பானைகளில் வளர்க்கலாம்.
-- ஜெயராஜ், பேராசிரியர் பூச்சியியல், வேளாண்மை கல்லுாரி மற்றம் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு சிவகங்கை
மனிதர்களோ, விலங்குகளோ தொந்தரவு செய்தால் கண், காது, மூக்கு, வாய்பகுதிகளில் நுழைந்து கடிக்கும். இதனால் வலி, தோல் எரிச்சல் ஏற்படும்.