/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வேயில் துாய்மை விருதுகள் வழங்கல்
/
மதுரை ரயில்வேயில் துாய்மை விருதுகள் வழங்கல்
ADDED : அக் 14, 2025 05:35 AM

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் துாய்மையாக பராமரிக்கப்பட்ட ஸ்டேஷன்கள், ரயில்கள், பணிமனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஆக., 1 முதல் அக்., 2 வரை இரு மாதங்களுக்கு துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கோட்டத்தில் துாய்மையாக பராமரிக்கப்பட்ட ஸ்டேஷன்கள், ரயில்கள், யார்டுகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
முக்கிய ஸ்டேஷன்களுக்குள், பெரிய ஸ்டேஷன் பிரிவில் திண்டுக்கல், நடுத்தர ஸ்டேஷன் பிரிவில் செங்கோட்டை, சிறிய ஸ்டேஷன் பிரிவில் பழநி அருகே உள்ள புஷ்பத்துார் விருது பெற்றன. ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
கேரள மாநில அவனீஸ்வரம் ஸ்டேஷனிற்கு சிறந்த யார்டுக்கான விருதும், 100 குடியிருப்புகளுக்குள் உள்ள செங்கோட்டை ரயில்வே காலனி, 100 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள திருநெல்வேலி ரயில்வே காலனிக்கு சிறந்த குடியிருப்புகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. கழிவுப்பொருட்களால் கோபுரம் போன்ற கலைப்பொருளை உருவாக்கிய மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை பகுதி பொறியாளர் பிரசன்னா சந்துரு தலைமையிலான குழு, சிறப்பு பரிசு பெற்றது.
துாய்மையாக பராமரிக்கப்பட்ட ரயில்களில் 1,000 கி.மீ.,க்குள் இயங்கும் பிரிவில் நெல்லை எக்ஸ்பிரஸ், 1,000 கி.மீ.,க்கு மேல் இயங்கும் பிரிவில் திருநெல்வேலி - பிலாஸ்பூர் ஆகிய ரயில்கள் விருது வென்றன.
இரு ரயில்களையும் சிறப்பாக பராமரித்த நெல்லை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைக்கு விருது வழங்கப்பட்டது.
கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என்.ராவ், சுற்றுச்சூழல் பிரிவு மேலாளர் குண்டேவர் பாதல், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.