/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் நிதியை பெறுவதில் சிக்கல் தவிப்பில் தலைமையாசிரியர்கள்
/
அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் நிதியை பெறுவதில் சிக்கல் தவிப்பில் தலைமையாசிரியர்கள்
அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் நிதியை பெறுவதில் சிக்கல் தவிப்பில் தலைமையாசிரியர்கள்
அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் நிதியை பெறுவதில் சிக்கல் தவிப்பில் தலைமையாசிரியர்கள்
ADDED : அக் 25, 2025 05:51 AM
மதுரை: அரசு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றத்தால் தலைமையாசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6 -8 மாணவர்களுக்கு தலா ரூ.29, 9 -10 மாணவருக்கு தலா ரூ.41, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு தலா ரூ.85 வீதம் சிறப்பு கட்டணத் தொகையை சி.இ.ஓ.,க்கள் மூலம் அந்தந்த பள்ளிகளில் தலைமையாசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தாண்டு தலைமையாசிரியர்கள் இத்தொகையை செலவிடுவது தொடர்பாக ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் புதிய பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி அரசு பள்ளிகளுக்கு தேவை அடிப்படையில் செலவு செய்த பின் அதற்கான பில், தொகை விபரம் பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதியை விடுவிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு செலவுகள் தலைமையாசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது.
துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவது உட்பட ஏற்கனவே பல்வேறு செலவினங்களை தலைமையாசிரியர் முன்கூட்டியே வழங்கும் நிலையில், இதையும் மேற்கொள்வதால் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாநில அளவில் ரூ.பல கோடி இதற்காக ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மருத்துவ நிதி, ஜெ.ஆர்.சி., ஸ்கவுட் நிதி, மன்ற இணை செயல்பாடுகள், பள்ளிக்கு தேவையான மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த சிறப்பு கட்டணம் நிதியை தலைமையாசிரியர் பயன்படுத்துவர்.
இந்தாண்டு முதல் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் விண்ணப்பித்து, பள்ளிக்குரிய தொகையை சிறப்பு நிதி கணக்கில் பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பதிவேற்றம் செய்தாலும் அத்தொகையை விடுவிப்பதில் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் இத்தொகையை செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பழைய முறையிலேயே இத்தொகையை தலைமையாசிரியர்கள் பெறுமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

