ADDED : டிச 24, 2024 04:55 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர்செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், ஆத்மநாதன், முத்துகுமார், லிங்கேஸ்வரி, ஜோதி கிருஷ்ணன், சாந்தாராம், ஹரிஹரன், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பள்ளிகளில் ஏற்படும் மின் கட்டணம், துாய்மை பணியாளர் சம்பளம், இணையதள சேவை கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு பின் அத்தொகையை அவர்களுக்கு வழங்குவதை தவிர்த்து, முன்கூட்டியே தலைமையாசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும்.
சீருடை, புத்தகம் உட்பட அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக பள்ளிகளிலேயே வழங்க வேண்டும். பள்ளிகளில் தணிக்கை முடிந்து 15 நாட்களுக்குள் அதன் அறிக்கையை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மீதான புகார்களுக்கு அதன் உண்மைத் தன்மையை அறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் திவ்யநாதன் நன்றி கூறினார்.