/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி நகராட்சியின் அரைகுறை நடவடிக்கையால் வீணாகும் திட்டங்கள்
/
உசிலம்பட்டி நகராட்சியின் அரைகுறை நடவடிக்கையால் வீணாகும் திட்டங்கள்
உசிலம்பட்டி நகராட்சியின் அரைகுறை நடவடிக்கையால் வீணாகும் திட்டங்கள்
உசிலம்பட்டி நகராட்சியின் அரைகுறை நடவடிக்கையால் வீணாகும் திட்டங்கள்
ADDED : அக் 19, 2025 03:16 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வளர்ச்சிப்பணிகள் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் அரைகுறையாக நின்று பொதுமக்களுக்கு பயன்தராத திட்டங்களாக மாறிவருகிறது.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் 2005 ல் நகராட்சி குப்பை சேமிப்புக்கிடங்கு பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. குப்பை சேமிப்புக் கிடங்குக்கு மாற்று இடம் கிடைக்காததாலும், குப்பையில் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் அந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தது. அந்தக் கட்டடத்திற்கும் 2021--22 நிதியாண்டில் ரூ.20லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி வீணானது.
2017--18ம் நிதியாண்டில் ரூ. 2 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக வத்தலக்குண்டு ரோட்டில் குப்பையை சேகரித்து உரமாக்கும் மையம் 5 ஏக்கரில் கட்டப்பட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம்பிரிக்க இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. இங்கு கொட்டிய குப்பையில் அடிக்கடி தீப்பற்றியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பால் அந்தப்பகுதியினர் குப்பையை கொண்டு வரவிடாமல் தடுக்கின்றனர்.
உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் முன்பாக மதுரை செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் வசதிக்காக ரூ.2 லட்சம் செலவில் ரோட்டரி கிளப் நிதியுதவியுடன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதற்கான வடிவமைப்பு சரியான திட்டமிடல் இல்லாததால் பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைகிறது.
மேலும் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர். பஸ்ஸ்டாண்டை புதுப்பிக்க கூடுதல் இடத்திற்காக சந்தை திடலில் இருந்து நிலம் கையகப்படுத்தாமல் 2023 ல், பணிகள் துவக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் கூடுதல் நிலம் கையகப்படுத்த முடியாமல் பஸ்ஸ்டாண்ட் பணிகள் நிறைவுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
வத்தலக்குண்டு ரோட்டில் உசிலம்பட்டி கண்மாய்கரை அருகே பயணியர் நிழற்குடை கட்ட தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச் செல்வன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கு நீர்வளத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் நகராட்சி நிர்வாகம் கண்மாய்கரையை சேதப்படுத்தி பில்லர் எழுப்பியுள்ளது.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீர் வளத்துறையினர், '2007 நீர்வழி ஆக்கிரமிப்பு தடைச்சட்டப்படி எவ்வித கட்டுமானப் பணியும் கட்ட இயலாது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை, நீதிமன்ற வழக்கு, துறைரீதியான பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு நகராட்சி நிர்வாகத்தின் அரைகுறை செயல்பாடுகளால் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காததுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகிறது.