ADDED : அக் 05, 2025 03:05 AM
மதுரை : வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாழை பயிர்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது:
வாழைத் தோட்டங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்ற வேண்டும்.
சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை முட்டுக் கொடுக்க வேண்டும். வாழைத்தார்களை மூடி வைப்பதோடு 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
மா, கொய்யா, சப்போட்டா மரங்களில் காய்ந்த கிளைகளை அகற்றி காற்றோட்டம் இருக்குமாறு கவாத்து செய்ய வேண்டும்.
மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதி செய்யவேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் மரங்களின் துார்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளை ஊன்ற வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களுக்குத் தேவையான தொழுஉரம் இட்டு, நோய்த் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களின் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். உள்ளே காற்று புகாதவாறு கதவு, ஜன்னல்களை மூட வேண்டும்.
அருகில் மரங்கள் இருந்தால் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். வாழை, வெங்காயம், மிளகாய் மற்றும் தக்காளிபயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்ட திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.