/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போட்டித்தேர்வு மாணவர்களுக்கு மனமிறங்குமா பேரூராட்சி நிர்வாகம் நுாலகம் அமைக்க இடம் கேட்கும் பொதுமக்கள்

ADDED : ஜன 02, 2026 06:15 AM

சோழவந்தான்: சோழவந்தான் நுாலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் புதிய கட்டடம் கட்ட அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு இரட்டை அக்ரஹாரத்தில் 67 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாடகை கட்டடத்தில் இந்நுாலகம் இயங்கி வருகிறது. மாணவர்கள் தினமும் போட்டித்தேர்வுகளுக்கு படிக்க இங்கு வருகின்றனர். நுாலக கட்டடம் பழமையானதாகவும், குறுகியும் உள்ளது. இதனால் போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இடவசதியின்றி நடைபாதையில் படிக்கும் அவலம் நிலவுகிறது.
மாணவர்கள் மலர்க்கொடி, கங்கேஸ்வரி, சுல்தான் கூறியதாவது: நாங்கள் போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருகிறோம். வீட்டில் படிப்பது சிரமமாக உள்ளது. இதனால் இங்கு காலை முதல் மாலை வரை படிக்கிறோம். தேவையான அனைத்து புத்தகங்களும் இருப்பதால் படிக்க எளிதாக உள்ளது. குழுவாக சேர்ந்து படிப்பதும் ஊக்கம் ஏற்படுகிறது. இங்கு நாற்காலிகள் இருந்தும் அதை பயன்படுத்த இடமில்லை. கழிப்பறை வசதியின்றி சிரமம் அடைகிறோம். புதிதாக கட்டடம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
நுாலக அதிகாரிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஊருக்கு வெளியே இடம் இருப்பதாக கூறுகிறார்கள். அங்கு அமைத்தால் யாருக்கும் பயன்படாமல் போய்விடும். சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே முன்னர் பேரூராட்சி வானொலி பூங்காவாக இருந்த இடம் தற்போது அங்கன்வாடி மையமாக உள்ளது. 10 சென்டுக்கும் மேற்பட்ட இடம் அங்குள்ளது.
நுாலகத் துறை சார்பில் கட்டடம் கட்ட நிதி தயாராக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் முயன்று அந்த இடத்தை பெற்று தந்தால் இங்கிருக்கும் இரண்டாம் நிலை நுாலகம் முதல் நிலை நுாலகமாக கூட மாற வாய்ப்புள்ளது என்றனர்.
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பல ஆண்டுகளாக இதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் செயல்படுத்துவோம்'' என்றனர்.