/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு என்ற பெயரில் வீணாகும் பொதுப்பணி, நீர்வளத்துறையின் நிதி
/
பராமரிப்பு என்ற பெயரில் வீணாகும் பொதுப்பணி, நீர்வளத்துறையின் நிதி
பராமரிப்பு என்ற பெயரில் வீணாகும் பொதுப்பணி, நீர்வளத்துறையின் நிதி
பராமரிப்பு என்ற பெயரில் வீணாகும் பொதுப்பணி, நீர்வளத்துறையின் நிதி
ADDED : அக் 16, 2024 05:34 AM
மதுரை : ''மராமத்து, பராமரிப்பு என்ற பெயரில் மழைநீர் வாய்க்கால் துார்வாருவதற்காகவும், கட்டடங்களுக்காகவும் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் ரூ.பலநுாறு கோடி ஒதுக்கியும் பணிகள் முழுமையாக செய்யப்படுவதில்லை'' என தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரையில் அவர்கள் கூறியதாவது:
நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் ஆண்டு பராமரிப்பு பணிக்கான மதிப்பீடு, ஒப்பந்தம் அதற்கான பட்டியல் அனைத்தும் அந்தந்த பகுதி அலுவலகங்களில் தயாரிக்கப்படுகிறது. பராமரிப்பு வேலைகளை முழுமையாக செய்யாமல் பணி செய்ததாக பில்லை அதிகாரிகள் தயார் செய்கின்றனர். இப்படி ஆண்டுதோறும் 50 சதவீத பணிகள் கூட செய்யப்படுவதில்லை.
மழைநீர் வாய்க்கால், கண்மாய் வரத்து வாய்க்கால், மறுகால் வாய்க்கால், ஷட்டர் பராமரிப்பு, தனி வாய்க்கால் பராமரிப்பு என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நிதி ஒதுக்கப்படுகிறது. இப்படி தமிழகத்தில் ஒவ்வொரு டிவிஷனுக்கும் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வீதம் அனைத்து தனி கால்வாய், கண்மாய் வரத்து கால்வாய், பொதுப்பணித்துறை கட்டட பராமரிப்புக்கென ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை முறையாக செய்து கால்வாய்களை துார்வாரி சீரமைத்திருந்தால் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாது. முறையாக வாய்க்காலை பராமரித்தால் ஆக்கிரமிப்புகளும் வராது. நகர்ப்புற விரிவாக்கத்தின் முதல் படி நீர்ப்பாசன கால்வாய்களை அழிப்பதுதான். நீர்வளத்துறை அதனை அழிய விடாமல் பாதுகாத்தால்தான் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாக்கலாம்.
அதிகாரிகள் ஒரே மாவட்டத்திற்குள்ளேயே பதவி உயர்வு பெற்று கான்ட்ராக்டர்களுடன் இணக்கமாக பழகுவதால் மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகளை பெயரளவிற்கே செய்கின்றனர். அதிகாரிகளை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும். பராமரிப்புக்கு ஒதுக்கும் தொகை குறித்து அமலாக்கத்துறை விசாரித்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.