/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செப்.,1 முதல் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி குறைப்பு; கோவில்பட்டி - கடம்பூர் சம்பவம் எதிரொலி
/
செப்.,1 முதல் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி குறைப்பு; கோவில்பட்டி - கடம்பூர் சம்பவம் எதிரொலி
செப்.,1 முதல் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி குறைப்பு; கோவில்பட்டி - கடம்பூர் சம்பவம் எதிரொலி
செப்.,1 முதல் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி குறைப்பு; கோவில்பட்டி - கடம்பூர் சம்பவம் எதிரொலி
ADDED : ஜூலை 07, 2025 03:27 AM
மதுரை :  மதுரைக் கோட்டத்தில் கோவில்பட்டி - கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே சிக்னல் கோளாறால் நிகழ இருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதன் எதிரொலியாக செப்., 1 முதல் ஸ்டேஷன் மாஸ்டர்களின் பணிச்சுமை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.
மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட 18 ஸ்டேஷன்களில் பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் பணிகளைத் தவிர முன்பதிவு, தட்கல் டிக்கெட் வழங்கல், பார்சல் புக்கிங், ஸ்டேஷன்களுக்கு வந்து செல்லும் ரயில்கள் குறித்து அறிவித்தல், பயணிகளின் விசாரணைகளைக் கையாளுதல் என வணிகம் உட்பட பிற செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
இவை, அவர்களின் பணிச்சுமையை அதிகரித்து ரயில் இயக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்து  கவனத்தைத் திசை திருப்புகின்றன. தெற்கு ரயில்வேயில் கடந்த 2 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரிக்க ஸ்டேஷன் மாஸ்டர்கள், பணிகளை முறையாக செய்யத் தவறியதே காரணம் என உயரதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு உதாரணம் கோவில்பட்டி - கடம்பூர் சம்பவத்தில் இரு ஸ்டேஷன் மாஸ்டர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது.
பணிச்சுமை குறைப்பு
இதையடுத்து அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் (ஏ.ஐ.எஸ்.எம்.ஏ.,) சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து பேச்சு வார்த்தை நடந்தது. அதனடிப்படையில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பிரதான கடமைகளில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்ய ஒருநாளில் 24க்கும் மேற்பட்ட ரயில்களை கையாளும் ஸ்டேஷன்களில், செப்., 1 முதல் வணிக  சேவைகளில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார். வணிக சேவைகளுக்கு முதன்மை தலைமை கமர்ஷியல் மேலாளர் தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
இதனால் ஸ்டேஷன் மாஸ்டர்கள், ஸ்டேஷனை கடக்கும் ரயில்கள் குறித்து அடுத்த ஸ்டேஷன்களுக்கு தகவல் அனுப்புதல், சிக்னலை உறுதி செய்து பாதுகாப்பாக ரயில்களை அனுப்புதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் போதும்.
கூடுதல் பணியிடம் தேவை
ஏ.ஐ.எஸ்.எம்.ஏ., மதுரைக் கோட்ட துணைத் தலைவர் விஜயராஜன் கூறியதாவது:
மதுரைக் கோட்டத்தின் 61 ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு முன்பதிவு, தட்கல் டிக்கெட்களை ஸ்டேஷன் மாஸ்டர்களே வழங்குகின்றனர். சில நேரங்களில் பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்படுவதால் முதன்மை கடமையான ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடியாமல் கவனம் சிதறுகிறது. தற்போது ரயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2011ல் நடத்திய போராட்டத்தின் மூலம்அங்கீகாரம் பெற்று, பின்னர் ரத்து செய்யப்பட்ட 308 கூடுதல் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப வேண்டும் என்றார்.

