/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரெல்லாம் மழை வெள்ளம் திருமங்கலத்திலோ வறட்சி
/
ஊரெல்லாம் மழை வெள்ளம் திருமங்கலத்திலோ வறட்சி
ADDED : அக் 24, 2025 02:37 AM
திருமங்கலம்: மதுரை மாவட்டம் முழுவதும் சிலநாட்களாக மழை பெய்தாலும், திருமங்கலம் பகுதி கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
தொடர்ந்து பெய்யும் மழையால் வைகை அணை நிரம்பிய நிலையில் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வணையில் இருந்து இப்பகுதி கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் வரும்.
இந்தப் பிரதான கால்வாய் மூலம் திருமங்கலம் பகுதிக்கு இதுவரை முழுமையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதியில் உள்ள குதிரை சாரி குளம், மேல உரப்பனுார், கரடிக்கல், சொரிக்கம்பட்டி, மறவன் குளம், ஊராண்ட உரப்பனுார் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டுள்ளன.
மழை பெய்து அணையில் முழுஅளவு தண்ணீர் இருக்கும் நிலையிலும் கண்மாய்களுக்கு போதிய தண்ணீரை திறக்காத அதிகாரிகள், கண்துடைப்பு வேலையாக சில கண்மாய்களுக்கு மட்டும் சிறிதளவு நீரை திறந்து விடு கின்றனர்.
மழைக்காலம் நின்ற பின்பு திருமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தாலும் தண்ணீரை திறந்து விடுவதே இல்லை. கடந்தாண்டு தண்ணீர் திறப்பு போதிய அளவு இல்லாததால்தான் எந்தக் கண்மாயும் முழு கொள்ளளவை எட்டவில்லை.
இதனால் திருமங்கலம் பகுதியில் மழையை மட்டுமின்றி, கண்மாயை நம்பியும் பயிர் செய்துள்ள விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை உள்ளது.
வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரை திருமங்கலம் பகுதிக்கு திருப்பி விட்டு கண்மாய்களை முழுமையாக நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.

