ADDED : செப் 19, 2025 02:41 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் சில நாட்களாக பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.
வழக்கமாக விவசாயிகள் ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம். இந்தாண்டு மழை இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும், விவசாயிகள் பணிகளை துவக்கவில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு கண்மாய்களில் சிறிதளவு தண்ணீர் இருந்ததாலும், அவ்வப்போது லேசான மழை பெய்ததாலும் கோடை உழவு செய்து ஆடி 18ல் பணிகளை துவக்கினோம். இந்தாண்டும் மழை பெய்யும் என நம்பிக்கையில் பலர் கோடை உழவு செய்தனர்.
ஆடி 18ல் நடவுக்காக விதை நெல், காய்கறிகள் விதைகளுடன் தயாராக இருந்தோம். ஆனால் மழை பெய்யவில்லை. கிணறுகள், ஆழ்குழாய்களிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால் நாற்றுப் பாவ, காய்கறிகள் விதைக்கவில்லை.
சில நாட்களாக பெய்து வரும் மழை உழவுக்கு உதவியாக உள்ளது. பலர் உழவுப் பணிகளை துவங்கியுள்ளனர்.
பலர் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை பெய்தால் நெல் நடவு செய்து விடுவோம் என்றனர்.