/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பால் மாயமான கால்வாய்கள் விரிவாக்க பகுதியில் தேங்கும் மழைநீர்
/
ஆக்கிரமிப்பால் மாயமான கால்வாய்கள் விரிவாக்க பகுதியில் தேங்கும் மழைநீர்
ஆக்கிரமிப்பால் மாயமான கால்வாய்கள் விரிவாக்க பகுதியில் தேங்கும் மழைநீர்
ஆக்கிரமிப்பால் மாயமான கால்வாய்கள் விரிவாக்க பகுதியில் தேங்கும் மழைநீர்
ADDED : ஜன 03, 2025 02:05 AM

அலங்காநல்லுார்: கோவில்பாப்பாகுடி, பொதும்பு விரிவாக்கப் பகுதிகளில் பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் மாயமானதால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
மதுரை நகரையொட்டிய பொதும்பு, கோவில்பாப்பாகுடி விரிவாக்க பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள பொதும்பு கண்மாயில் இருந்து பொன்குடில், ஜானகி உள்ளிட்ட நகர்கள் வழியாக வரும் பாசன கால்வாய்கள் கோவில்பாப்பாகுடி ரோட்டில் 7 இடங்களில் ரோட்டை கடந்து செல்கின்றன.
இந்த ஓடைகள் அனைத்தும் கழிவுநீர் ஓடைகளாக மாறிவிட்ட நிலையில், தற்போது 2 ஓடைகளில் மட்டுமே கழிவுநீர் செல்கிறது, மற்றவை மாயமாகிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
கருணாகரன் கூறியதாவது: கண்மாய் பாசனத்தில் விவசாயம் நடந்த நிலமெல்லாம் வீட்டடி மனைகள், வீடுகளாக மாறிவிட்டன. தற்போது இந்த ஊராட்சிகளில் பேரூராட்சி அளவுக்கான மக்கள் தொகை உள்ளது. கோவில்பாப்பாகுடி ரோட்டை கடக்கும் 7 பாலங்கள் மிக சிறியவை. இப்பகுதியில் சென்ற 30 அடி கால்வாயை பல்வேறு நிறுவனங்கள் ஆக்கிரமித்து பார்க்கிங் ஏரியா, வீடுகள், மண்மேவி தோட்டங்கள், கால்நடை வளர்ப்பு என கட்டுமானம் இன்றி தற்காலிக பயன்பாட்டிற்கு வேலிகள் அமைத்து வைத்துள்ளனர் என்றார்.
வீரக்குமார் கூறியதாவது: கருங்கற்களால் ஆன பாசன கால்வாயை, அடுத்தடுத்து பிளாட் அமைத்தவர்கள் அகற்றி விட்டனர். இப்போது மழை, கழிவுநீர் வெளியேற வழியில்லை. மெயின் ரோட்டோரம் இருந்த பாசன வாய்க்கால்கள் மாயமானதால் காலி மனைகளில் தண்ணீர் தேங்குகிறது. வயல்களாக இருந்தபோது தண்ணீர் செல்ல பாலங்கள் இருந்தன.
இன்று குடியிருப்பு பகுதிகளானபின், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற, பாலங்கள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

